தொல்தமிழ் குறவர்குடி மக்களைத் தனிப்பெரும் சமூகமாக அறிவித்து, பழங்குடியின பட்டியலில் உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என சீமான் வலியுறுத்தல்.
இது குறித்து அவர் அறிக்கையில் வாயிலாக தெரிவித்துள்ளதாவது, தொல்தமிழ் குறவர்குடி மக்களை இந்திய ஒன்றிய அரசு பழங்குடியினர் பட்டியலில் சேர்த்துள்ளது வரவேற்கத்தக்கதே. எனினும் அவர்களின் மற்றுமொரு மிகமுக்கிய, நீண்டகாலக் கோரிக்கையான தமிழ்க் குறவர்குடி மக்களைத் தனித்த சமூகமாக அறிவித்து, உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை நிறைவேற்ற ஆளும் அரசுகள் தொடர்ந்து மறுத்து வருவது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.
ஒடுக்கப்பட்டவர்களிலும் மிகவும் ஒடுக்கப்பட்டவர்களாகப் பின்தங்கியுள்ள குறவர்குடி மக்களின் அடிப்படை உரிமைகள் பன்னெடுங்காலமாகப் பறிக்கப்பட்டு வருவது மாபெரும் சமூக அநீதியாகும். இழந்த தங்களது உரிமைகளை மீட்பதற்காகப் போராடும் தொல்குடி மக்கள், அதிகாரவர்க்கத்தால் பல்வேறு துன்புறுத்தல்களுக்கும் ஆளாகின்றனர். குறிப்பாக வடமாநிலங்களைச் சேர்ந்த நக்கலே சமூக மக்களை, நரிக்குறவர் எனப் பெயர்மாற்றி அழைப்பதால், தமிழ்நாட்டில் தங்களுக்குக் கிடைக்கும் சொற்ப வகுப்புரிமைகளும் பறிபோவதாகத் தமிழ் குறவர்குடி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கல்வி, வேலைவாய்ப்பு, இட ஒதுக்கீடு, பொருளாதாரம் எனத் தமிழர்களின் உரிமைகள் அனைத்தும் வட மாநிலத்தவர்களால் தொடர்ந்து அபகரிக்கப்படும் வேளையில், மிகவும் பின்தங்கியுள்ள மண்ணின் மக்களான குறவர்குடி மக்களின் உரிமைகளும் வெளியிலிருந்து வந்த, நக்கலே உள்ளிட்ட சமூக மக்களால் பாதிப்புக்குள்ளாவதைத் தடுக்க வேண்டும் என்று கோருவது மிகமிக நியாயமானதேயாகும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஆறாவது நாளாக தொடர் பட்டினிபோராட்டம் மேற்கொண்டு வரும் வனவேங்கைகள் கட்சித் தலைவர் அன்புத்தம்பி இரணியன், இன்று உடல்நலம் குன்றி மயக்கமடைந்த செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
உரிமைகள் வென்றெடுக்க போராடுவதுதான் இருக்கின்ற ஒரே வழி என்றாலும் தொடர்ச்சியாகப் போராடுவதற்கும், போராட்டத்தை வழிநடத்துவதற்கும் போராளிகளின் இருப்பு மிக அவசியம் என்பதால், உடல் நலத்தைக் கருத்தில்கொண்டு, தம்பி இரணியன் தமது அறப்போராட்டத்தின் வடிவத்தை மாற்ற வேண்டுமென்று உரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன். வனவேங்கைகள் கட்சியின் உரிமைப்போராட்டம் வெல்லும்வரை நாம் தமிழர் கட்சி துணைநிற்கும் என்றும் உறுதியளிக்கிறேன்.
எனவே, இதற்கு மேலும் தாமதப்படுத்தாது வனம் இழந்து, நிலமிழந்து, உரிமைகள் பறிக்கப்பட்டு, வாழ்வாதாரம் நசுக்கப்பட்டு, விளிம்பு நிலையில் நலிந்த மக்களாய் வாழும் ஆதித்தமிழ்க்குடி குறவர்களை மட்டுமே தமிழ்க்குறவர் என்ற சிறப்புப்பெயரில் அழைக்க வேண்டுமெனவும், மாற்று மொழி மக்களை அவர்களின் சொந்தப்பெயரில் மட்டுமே அடையாளப்படுத்த வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன். மேலும், தமிழ்க்குறவர்குடி மக்களை தனிப்பெரும் சமூகமாக அறிவித்து, பழங்குடியின பட்டியலில் உள் இட ஒதுக்கீடு வழங்க உடனடியாக அரசாணை வெளியிட வேண்டுமெனவும் இந்திய ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசினை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.