பிரபஞ்சனுக்கு கிடைத்த கல்வி அனைவருக்கும் கிடைப்பதில்லை: சசிகலா

Webdunia
புதன், 14 ஜூன் 2023 (16:38 IST)
மாணவர் பிரபஞ்சனுக்கு கிடைத்த கல்வி, தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் கிடைப்பதில்லை என சசிகலா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் முழு மதிப்பெண்கள் பெற்று தமிழ்நாட்டை சேர்ந்த பிரபஞ்சன் தேசிய அளவில் முதலிடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளதற்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
 
மேலும், இத்தேர்வில் தேசிய அளவில் முதல் 10 இடங்களைப் பிடித்தவர்களில் நால்வர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது மகிழ்ச்சியளிக்கிறது. மேலும் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ள தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 
 
மாணவர் பிரபஞ்சனின் சாதனை ஈடு இணையில்லாதது. ஆனால், அதேசமயம் சி.பி.எஸ்.இ-யின் என்.சி.இ.ஆர்.டி. பாடத்திட்டத்தில் பிளஸ்-1,           பிளஸ்-2 படித்து, நீட் தேர்வை எதிர்கொண்ட மாணவர் பிரபஞ்சனுக்கு கிடைத்த கல்வி, தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் கிடைப்பதில்லை. தமிழக அரசின் பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவச்செல்வங்களால், நீட் தேர்வை எதிர்கொள்ள மிகவும் சிரமப்படுகிறார்கள். 
 
மேலும், பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களால், நீட் தேர்வை எதிர்கொள்ள தேவையான சிறப்பு பயிற்சிகளை மேற்கொள்ள வசதியின்றி, நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியாமல் மருத்துவ கல்வி என்ற கனவு நிறைவேறாமல் போய்விடுகிறது. இதன் காரணமாகத்தான் தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு என்ற கோரிக்கை எழுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்