லட்சக்கணக்கில் கொடுத்து படித்ததால் நீட் தேர்ச்சி! – நீட்டை மறுக்கும் ராமதாஸ்!

புதன், 14 ஜூன் 2023 (09:04 IST)
இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் முதலிடம் பெற்றிருப்பது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.



நீட் தேர்வால் மாணவர்களின் மருத்துவ கனவுகள் பாதிக்கப்படுவதாக தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிர்ப்புகள் இருந்து வருகின்றன. அதேசமயம் நீட் தேர்வுகளுக்கு மாணவர்கள் தனியார் பயிற்சி மையங்கள் மூலமும் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு நடந்த நீட் தகுதி தேர்வில் தமிழகத்தை சேர்ந்த பிரபஞ்சன் என்ற மாணவர் 720 மதிப்பெண்களுக்கு 720 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

மேலும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்களில் முதல் 10 மாணவர்களில் 4 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த செய்தி குறித்து கருத்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் “2023-ஆம் ஆண்டிற்கான நீட் தேர்வில் விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரைச் சேர்ந்த மாணவர் பிரபஞ்சன் 720க்கு 720 மதிப்பெண் பெற்று தேசிய அளவில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளார். தேசிய அளவில் முதல் 10 இடங்களைப் பிடித்தவர்களில் நால்வர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவர்களுக்கும் நீட் தேர்வில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

அதேசமயம் “நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் முதலிடம் பிடித்திருக்கிறார்கள் என்பதாலேயே அத்தேர்வை நியாயப்படுத்த முடியாது. தனியார் பயிற்சி மையங்களில் லட்சக்கணக்கில் பணம் செலுத்தி பயிற்சி பெறும் அளவுக்கு வாய்ப்பும், வசதிகளும் உள்ளவர்களுக்கு மட்டுமே நீட் வெற்றி சாத்தியம். கிராமப்புற, ஏழை மாணவர்களுக்கு நீட் வெற்றி இப்போதும் எட்டாக்கனி தான். நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு எப்போது விலக்கு கிடைக்கிறதோ, அப்போது தான் ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி சாத்தியமாகும். அது தான் சமூக நீதிக்கு நிலையான வெற்றியாக அமையும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார். முதல் இடம் பெற்றுள்ள மாணவர் தனியார் நீட் பயிற்சி மையத்தில் பயின்று தேர்ச்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்