பரபரப்பான அரசியல் சூழலில் சிறையில் உள்ள சசிகலாவை டிடிவி தினகரன் நேற்று ஒன்றரை மணிநேர காத்திருப்புக்கு பின்னர் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது தினகரனிடம் சசிகலா கண்ணீர் விட்டு அழுததாக கூறப்படுகிறது.
நடைமுறைகளுக்கு உட்பட்டு நேற்று சசிகலாவை சிறையில் சந்தித்த தினகரன் கட்சியில் தற்போது நிலவும் சூழல் குறித்தும் எடப்பாடி பழனிச்சாமியின் எதிர் நிலைப்பாடு குறித்தும் ஆலோசித்து உள்ளார்.
மேலும் இந்த சந்திப்பின் போது சசிகலா சிறையில் உள்ள கெடுபிடிகள் குறித்தும் தினகரனிடம் கூறி கண் கலங்கியதாக கூறப்படுகிறது. சிறையில் சசிகலா நலமாக இருந்தாலும் அங்கு உள்ள கெடுபிடிகளால் அவர் சோர்ந்து போய் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தினகரனிடம் பேசிய சசிகலா அடிக்கடி உணர்ச்சிவசப்பட்டிருக்கிறார்.
கண்ணீர் மல்கிய சசிகலாவுக்கு ஒருசில வார்த்தைகள் ஆறுதல் சொல்லிவிட்டு வெளியே வந்த தினகரன், தனது ஆதரவாளர்களிடம் கூறுகையில், சசிகலாவுக்கு சிறையில் கொடுக்கப்படும் நெருக்கடிகள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார்.
எப்பொழுதும் சிறைக்காவலர்கள் கண்காணிப்பில் இருப்பதால் சசிகலாவால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. அதுமட்டுமல்லாமல் சிறையில் கொடுக்கப்படும் உணவையும் அவரால் சரியாக சாப்பிட முடியவில்லை என தினகரன் தனது ஆதரவாளர்களிடம் கூறி வருத்தப்பட்டுள்ளார்.