இருப்பு இருக்கும் மணலை லாரிகளுக்கு வழங்கக் கூடாது- தொழிலாளர்கள் போராட்டம்

Webdunia
செவ்வாய், 17 அக்டோபர் 2023 (20:27 IST)
கரூர் அருகே அரசு மணல் சேமிப்பு கிடங்கில் இருப்பு இருக்கும் மணலை லாரிகளுக்கு வழங்கக் கூடாது என மாட்டு வண்டி தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
கரூர் மாவட்டம், வாங்கல் அடுத்த மல்லம்பாளையம் கிராமத்தில் காவிரி ஆற்றில் அரசு மணல் குவாரி செயல்பட்டு வந்ததது. இங்கிருந்து லாரிகள் மூலம் அள்ளப்படும் மணல் எல்லைமேடு, கணபதிபாளையம், நன்னியூர் புதூர் அரசு மணல் கிடங்கில் சேமிக்கப்பட்டு, இங்கிருந்து லாரிகள் மற்றும் மாட்டு வண்டிகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அரசு மணல் குவாரி ஒப்பந்ததாரர்களின் வீடுகள் மற்றும் அலுவலங்கள், மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதனால் கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மணல் குவாரிகள் மூடப்பட்டன. 
 
சுமார் 45 நாட்களாக மணல் குவாரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், மாட்டு வண்டி தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற மணல் மாட்டு வண்டிகளுக்கு உள்ளூர் தேவைகளுக்காக மணல் அள்ள அனுமதிக்க வேண்டும் என நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகளை சந்தித்து மனு அளித்து வந்தனர். இந்நிலையில் நன்னியூர் புதூர் கிராமத்தில் உள்ள அரசு மணல் சேமிப்பு கிடங்கில் உள்ள மணலை லாரிகளுக்கு விற்பனை செய்ய இருப்பதாக தகவல் வெளியானதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று கரூர் மாவட்ட மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்கத்தினர் நன்னியூர் புதூர் அரசு மணல் சேமிப்பு கிடங்கில் திறண்டனர். மாட்டு வண்டி தொழிலாளர்கள் சுமார் 60க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கரூர் மாவட்டத்தில் மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதி பேர் தங்களுடைய மாடுகளை பராமரிக்க முடியாமல் கேரளாவிற்கு அடிமாடாக விற்பனை செய்தும், மீதமுள்ள மாடுகளை காப்பாற்ற போராடுவதாகவும், அந்த சேமிப்பு கிடங்கில் இருக்கும் மணலை மாட்டு வண்டிகளுக்கு உள்ளூர் தேவைக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து காத்திருப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்