பருவமழை பெய்ததா ? பொய்த்ததா ? – வானிலை ஆய்வு மையம் அலசல்

Webdunia
திங்கள், 31 டிசம்பர் 2018 (16:20 IST)
2018 ஆம் ஆண்டு போதுமான அளவுக்கு வடகிழக்க்குப் பருவமழைப் பெய்யாமல் பொய்த்து போனதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு இன்றோடு முடிகிறது. பலத் துறைகளின் சார்பில் இந்த ஆண்டு நடந்த சம்பவங்கள் குறித்து விரிவான அலசல் செய்யப்பட்டு வருகிறது. அதுபோல வானிலை துறையிலும் இந்த ஆண்டு பெய்துள்ள மழை மற்றும் அது சராசரி அளவை விட அதிகமா அல்லது குறைவா என்று அலசி ஆராயப்பட்டு விரிவான அறிக்கையாக இன்று பத்திரிக்கையாளர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்று நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.  அப்போது அவர் கூறியதாவது:-

‘2018 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் பாண்டியில் பதிவான தென்மேற்குப் பருவமழையின் அளவு 28 செ.மீ. இது சராசரி அளவை விட 12 % குறைவு. தமிழகம் மற்றும் புதுச்சேரியின் முக்கிய மழை ஆதாரமான வடகிழக்குப் பருவமழயின் பதிவான அளவு 34 செ.மீ.இது சராசரியை விட 24% குறைவு. எனவே இந்தாண்டு இரண்டு பருவமழைகளும் சரியாக பெய்யாமல் பொய்த்து விட்டன.

தருமபுரி, கிருஷ்ணகிரி, சென்னை, கரூர் ஆகிய மாவட்டங்களில் சராசரியை விட 50 % க்கும் குறைவாக மழை பெய்துள்ளது. சில மாவட்டங்களில் 40-50 % குறைவாகவும் மேலும் சில மாவட்டங்களில் 30-40 சதவீதத்திற்கு குறைவாகவும், 4 மாவட்டங்களில் 20-30 சதவீதத்திற்கு குறைவாகவும் 10 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 1 முதல் 20  சதவீதத்திற்கு குறைவாகவும் மழை பெய்துள்ளது. தமிழ்நாட்டிலேயே ஒரேயொரு மாவட்டத்தில் (திருநெல்வேலி) சராசரியை விட 11% அதிகமாக மழை பெய்துள்ளது.’ என தெரிவித்தார். ஒட்டுமொத்தமாக 2018 ஆம் ஆண்டு மழை பொய்த்த ஆண்டாகவே அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்