குரூப் 4 காலிப்பணியிடங்கள் குறைப்பு:தமிழக இளைஞர்களுக்கு இழைக்கப்படும் அநீதி- டிடிவி. தினகரன்

Sinoj
செவ்வாய், 30 ஜனவரி 2024 (12:39 IST)
தமிழ்நாட்டில் குரூப் 4 தேர்வுக்கான காலிப்பணியிடங்கள் குறைக்கப்பட்டிருப்பது தமிழக இளைஞர்களுக்கு இழைக்கப்படும் அநீதி   என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
 
''தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில் குரூப் 4 தேர்வுக்கான காலிப்பணியிடங்கள் குறைக்கப்பட்டிருப்பது தமிழக இளைஞர்களுக்கு இழைக்கப்படும் அநீதி - காலிப்பணியிடங்களை உடனடியாக அதிகரிப்பதோடு, குளறுபடி, முறைகேடுகளின்றி தேர்வு நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
 
கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 6,244 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு ஜூன் 9 ஆம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று அறிவித்துள்ளது.
 
2022 ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்விற்கு 10 ஆயிரத்திற்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது வனக்காவலர் பணியிடங்களையும் சேர்த்து 6,244 பணியிடங்களுக்கு மட்டுமே வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பாணை, தேர்வை எதிர்பார்த்து காத்திருந்த லட்சக்கணக்கான தமிழக இளைஞர்களை ஏமாற்றமடையச் செய்திருக்கிறது.
 
அதே நேரத்தில், முன்னதாக நடைபெற்ற குரூப் 4 தேர்வின் முடிவுகள் ஓராண்டுக்கு பின்னர் காலதாமதமாக அறிவிக்கப்பட்டதையும், அதில் ஒரே தேர்வு மையத்தில் பயின்ற ஏராளமான தேர்வர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்றதாக எழுந்த புகார்களையும் கருத்தில் கொண்டு வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள குரூப் 4 தேர்வை எந்தவித புகாருக்கும் இடமளிக்காத வகையில் நடத்துவதில் டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் முழு கவனம் செலுத்திட வேண்டும்.
 
மேலும், தமிழக இளைஞர்களின் அரசுப் பணி கனவை நினைவாக்கும் வகையில் குரூப் 4 தேர்வுக்கான காலிப்பணியிடங்களை அதிகரித்து புதிய அறிவிப்பாணை வெளியிடுவதோடு, நியாயமான முறையில் தேர்வை நடத்தி உரிய காலத்திற்குள் முடிவுகள் வெளியிடுவதை அரசுப் பணியாளர் தேர்வாணையம் உறுதி செயய் வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்