தமிழகம் வந்த பிரதமர் மோடி பல சமூகங்களை தேவேந்திரகுல வேளாளர் என்று அழைக்க மசோதா தாக்கல் செய்யப்பட்டது குறித்து பேசியதற்கு ராமதாஸ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று தமிழகம் வந்தார். பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் தொடங்கி வைத்த அவர் பல சமூகங்களை தேவேந்திரகுல வேளாளர் பட்டியலில் இணைக்க மக்களவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா குறித்தும் பேசினார்.
இந்நிலையில் பிரதமரின் இந்த உரை குறித்து பேசியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் “பள்ளர், குடும்பன், காலாடி உள்ளிட்ட 7 சமுதாயங்களை தேவேந்திரகுலவேளாளர் என்று அழைப்பதற்கான மசோதா மக்களவையில் தாக்கல் செய்திருப்பது குறித்தும், தேவேந்திர குல வேளாளர் சமுதாய பண்பாடு குறித்தும் சென்னை விழாவில் பிரதமர் மோடி 10 நிமிடங்கள் பேசியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது!” என்று கூறியுள்ளார்.
மேலும் “தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தின் உரிமைகள், பெருமைகள் குறித்து எவரும் பேசுவதற்கு முன்பே நான் பேசியதும், வடக்கே வன்னியர்கள், தெற்கே தேவேந்திரர்கள் என்ற முழக்கத்துடன் 05.03.1989-இல் மதுரை தமுக்கம் திடலில் ஒருதாய்மக்கள் மாநாட்டை நான் நடத்தியதும் என் மனதில் நிழலாடுகின்றன!” என்று கூறியுள்ளார்.