கடந்த மே மாதம் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்ட நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்து சூசகமாக பேசினார். அதன் பின்னர் காலா படப்பிடிப்புக்கு சென்ற ரஜினி மீண்டும் தனது ரசிகர்களை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.
தனது ரசிகர்கள் அனைவரையும் ஒரேயடியாக சந்திக்க முடியாது என்பதால் கடந்த மே மாதம் 15 மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்த ரஜினிகாந்த் அவர்களுடன் புகைப்படம். சில நாட்கள் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது ரஜினிகாந்த் அரசியல் குறித்து நிறையவே பேசினார்.
வழக்கத்துக்கு மாறாக அரசியல் பிரவேசம் குறித்து சூசகமாக சில கருத்துக்களை கூறி அனைவரையும் தயாராக இருக்குமாறு கூறினார். இதனையடுத்து தமிழக அரசியல் களத்தில் ரஜினி குறித்த பேச்சு அதிகமாக அடிபட்டது. ஆதரவும் எதிர்ப்பும் தமிழக அரசியல்வாதிகளிடம் இருந்து கலந்து வந்தது.
இந்நிலையில் காலா படப்பிடிப்புக்கு சென்ற ரஜினி செப்டம்பர் மாதம் படப்பிடிப்பை முடித்துவிட்டு அக்டோபரில் மீதமுள்ள தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது ரஜினி தனது அரசியல் பிரவேசம் குறித்து நேரடியாக பேசுவார் என அவரது ரசிகர்கள் கூறுகின்றனர். வரும் 20-ஆம் தேதி திருச்சியில் நடைபெற உள்ள மாநாட்டில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கான அவசியம் குறித்து தமிழருவி மணியன் பேச உள்ளது குறிப்பிடத்தக்கது.