தமிழகத்தின் கூவத்தூர் கலாச்சாரம் குஜராத் வரை பரவி புகழ்பெற்றுள்ளது என சமீபத்தில் அரசியல் கட்சியினர் கூறினர். இந்த கூவத்தூர் கலாச்சாரம் உச்சக்கட்ட ஜனநாயக விரோத பணநாயக அரசியல் ஆகும்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை பண ஆசை காட்டி அவர்களை விலைக்கு வாங்குவது எத்தகைய ஆரோக்கியமற்ற அரசியல் தெரியுமா?. இப்படி விலைக்கு வாங்கப்பட்ட எம்எல்ஏக்களை வைத்து இவர்கள் எப்படி மக்களுக்கான அரசை நடத்துவார்கள்.
ஆரோக்கியமற்ற, நாகரீகமற்ற, மக்களை தேர்தல் களத்தில் சந்தித்து மக்கள் செல்வாக்கை பெற முடியாதவர்கள் தான் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். வாக்களித்து தேர்ந்தெடுத்த மக்களை உதாசினப்படுத்தும் நடவடிக்கை தான் இது.
ஆனால் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் உங்களுக்கு இந்த மாதிரியான அவமானம் தான் வந்து சேரும் என்பதை குஜராத் மாநில ராஜ்யசபா தேர்தல் பாஜகவுக்கு உணர்த்தியுள்ளது.
குஜ்ராத் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு 3 எம்பிக்களை தேர்வு செய்யும் தேர்தல் குஜராத் சட்டமன்றத்தில் நேற்று நடைபெற்றது. பாஜக தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அரசியல் செயலாளர் அகமது பட்டேல் மற்றும் காக்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த பல்வந்த்சிங் உள்ளிட்டோர் இந்த தேர்தலில் போட்டியிட்டதால் இந்த தேர்தலை நாடே உற்றுப்பார்த்தது.
மூன்று இடங்களுக்கு 4 பேர் போட்டியிட்டதால் பரபரப்பு தொற்றிக்கொண்டது. காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஒரே வேட்பாளர் அகமது பட்டேலை தோற்கடிக்க கங்கணம் கட்டி களத்தில் இறங்கியது பாஜக. ஆனால் அதற்கு நேர்மையான வழியை பாஜக கடைபிடிக்காமல் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் ஜனநாயக விரோத வழியை தேர்ந்தெடுத்தது.
இதனால் பாஜக, காங்கிரஸ் இடையே மோதல் வெடித்தது தனது எம்எல்ஏக்களை பெங்களூர் கொண்டு சென்று பாதுகாத்தனர். ஆனாலும் 2 காங்கிரஸ் எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுத்தது பாஜக. இதனையடுத்து காங்கிரஸ் வேட்பாளர் அகமது பட்டேலின் வெற்றி வாய்ப்பு கேள்விக்குறியானது.
ஆனாலும் காங்கிரஸ் விடாமல் தேர்தல் ஆணையத்தை நாடி புகார் அளித்தது. ஜனநாயகத்தை அமைக்கும் பொறுப்பில் உள்ள தேர்தல் ஆணையம் இரண்டு காங்கிரஸ் எம்எல்ஏக்களும் பாஜகவுக்கு அளித்த வாக்கு செல்லாது என அறிவித்து திருப்பு முனையை ஏற்படுத்தியது.
இதற்கு பின்னர் நடந்த ஒரு சம்பவம் பாஜகவே எதிர்பார்க்காதது. திடீர் திருப்பமாக காங்கிரஸ் வேட்பாளர் அகமது பட்டேலுக்கு பாஜக எம்எல்ஏ நளின் கொட்டாடியா வாக்களித்ததாக கூறினார். தொடர்ந்து வெற்றிகளை கண்டு வரும் பாஜக வாக்கிய முதல் அடி இது. நீ ஒருவருடைய வளர்ச்சிக்கு தடையாக அவருக்கு எதிராக குழி தோண்டிக்கொண்டு இருந்தால் உனக்கு பின்னால் இருந்து உனக்கு எதிராக ஒருவன் குழி தோண்டிக்கொண்டிருப்பான் என்பதை இந்த தேர்தல் பாஜகவுக்கு உணர்த்தியுள்ளது.