ரஜினி – தலைவரா 1.0? அல்லது வியாபாரியா 2.0?

Webdunia
செவ்வாய், 4 டிசம்பர் 2018 (11:06 IST)
மகாராஷ்டிராவில் பிறந்து, கர்நாடகத்தில் வளர்ந்து தமிழ் சினிமாவில் நடித்து கொண்டிருப்பவர் ரஜினி. இவர் ஒரு நடிகர் மட்டும் தானா? அல்லது தமிழ்நாட்டின் மீது உண்மையிலேயே அக்கறை கொண்டவரா? – ஒரு சிறு அலசல்.
 
என் வழி தனி வழி:
‘என் வழி தனி வழி’ என்ற வசனம் போல் தனக்கென்று ஒரு பாணியை அமைத்துக்கொண்டு
தொடர்ந்து 40 ஆண்டுகளுக்கும் மேலாக சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரின் மனம்
கவர்ந்த நடிகர். இவரின் படம் ரிலீஸ் ஆகும்போது காவடி எடுத்து, கட் அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்து திருவிழா போல் கொண்டாடும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இதையும் தாண்டி கடவுள் போல் பாவிக்கும் ரசிகர்கள் கூட உண்டு.
 
தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு, இந்தி போன்ற பிற மொழிகளில் கூட சில படங்கள் வருவதுண்டு. ஏன், ஜப்பானில் கூட ஓரிரு படங்கள் மொழிமாற்றம் செய்து வெற்றிகரமாக வெளியிடப்பட்டது. இவ்வாறு ஒரு நடிகராக தொடர்ந்து சினிமா துறையில் சாதனைப் படைத்தவர் என்பதில் ஐயமில்லை.
 
சமூக தாக்கம்
ரஜினி நடிப்பதனால் தமிழ்நாட்டிற்கு என்ன பயன்? இவரது படங்கள் பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்தவை. இவர் நடிப்பை விட, இவரை திரையில் காணச் செல்லும் அன்பு ரசிகர்கள் அதிகம். மக்களை மகிழ்விக்கும் ஒரு கலைஞன்.
 
வர்த்தக ரீதியாக ரஜினியின் படங்களுக்கு வரவேற்பு அதிகம் என்பதால், கலைஞர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள் போன்ற சிலர் பயன் பெறலாம். இது கூட அனைத்து படங்களுக்கும் உத்தரவாதம் இல்லை என்பதும்
குறிப்பிடத்தக்கது.
 
இதைத் தவிர பத்திரிகை தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் இவரது படங்கள் மற்றும்
செய்திகளை வெளியிட்டு வியாபாரத்திற்கு பயன்படுத்திக்கொண்டன. இவற்றாலும் பெரிய
பொருளாதார தாக்கம் ஒன்றும் இல்லை.
 
ரஜினியின் படங்களும், வசனங்களும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதே தவிர,
சமுதாயத்தில் மாற்றத்தையோ, புரட்சியையோ ஏற்படுத்தவில்லை. மக்கள் செலவு செய்து படம் பார்த்தார்களே தவிர அவர்களது வாழ்க்கை மேம்படவில்லை. சமூக சிந்தனையை தூண்டும் படங்களோ, விழிப்புணர்வு ஏற்படுத்தும் படங்களோ அல்லது இளைஞர்களுக்கு வழிகாட்டும் படங்களோ இல்லை. தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை போற்றும் படங்கள் கூட இல்லை.
ரஜினியின் முதலீடு
கோடி கணக்கில் தமிழ்நாட்டில் ஈட்டிய பணத்தை லாபகரமாக கர்நாடகாவில் முதலீடு செய்துள்ளார். அது அவரது பணம் எங்கு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம் ஆனால் தமிழகத்திற்கு எந்த பிரயோஜனமும் கிடையாது என்பதே உண்மை. இங்கு எந்த வேலை வாய்ப்பும் உருவாக்கவில்லை. கண்துடைப்பாக, அவரது ரசிகர் மன்றங்கள் சிறு சிறு உதவிகள் வழங்கின. இதைத் தவிர பெரிய சமூக சேவை என்று சொல்லிக்கொள்ளும் படி எதுவும் இல்லை. தன் சம்பாத்தியத்தில் 1% -க்கும் குறைவாகவே நன்கொடை சில வழங்கியிருக்கலாம். ஆனால் கஜா புயல் போன்ற இயற்கை பேரழிவின் போது கூட மக்களோடு நின்று தோள் கொடுக்கவில்லை. பிறகு எப்படி தலைவர் ஆகா முடியும்?
சமூக அக்கறை
தமிழக மக்களின் வாழ்வாதாரமான காவிரி நீர் பிரச்சினையிலோ, அல்லது தமிழரின் அடையாளமான ஜல்லிக்கட்டு பிரச்சினையிலோ உறுதுணையாக நிற்கவில்லை. தூத்துக்குடி தாமிர ஆலை நச்சு கழிவு போராட்டம், மீத்தேன் போராட்டம், விவசாயிகள் போராட்டம் போன்ற அனைத்து சமூக பிரச்சினைகளிலும் இதே நிலை தான். இந்த போராட்டங்கள் எல்லாம் ஒரு தமிழனாக இல்லாவிட்டாலும், ஒரு சக மனிதனாக நின்று பார்த்தால் கூட நியாயம் என்று புரியும். இவற்றை அலட்சியப்படுத்தியது மட்டுமல்லாமல், தூத்துக்குடி போராட்டத்தில் 13 மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து விடுத்த அறிக்கையில், எதற்கெடுத்தாலும் போராடினால் தமிழ்நாடு சுடுகாடாக மாறிவிடும் என்று டயலாக் வேறு விடுகிறார். சமூக அக்கறையோ அல்லது தமிழ் கலாச்சாரம் பற்றிய உணர்வோ அவருக்குத் துளியும் இருப்பதாகத் தெரியவில்லை.
அணைக்கட்டுவதும், காசை அள்ளிக்கொடுப்பதும் படத்தில் மட்டுமே. இதை வைத்து தமிழக
மக்கள் நிஜத்தில் ஒன்றுமே செய்யமுடியாது. ஆன்மீக வாழ்கை என்கிறார், ஆனால் காசுக்காக தன் மகளைவிட குறைந்த வயதுடைய பெண்களுடன் ஆடிப் பாடுகிறார். இது சட்டப்படி குற்றம் இல்லைதான், ஆனால் சமூகத்தில் எவ்வித கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் என்பதை உங்கள் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்.
 
அரைகுறை அரசியல் நிலைப்பாடு
சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலுக்கு வருவேன் தமிழ்நாட்டு மக்களை தலைநிமிர செய்வேன் என்று டயலாக் மட்டும் விடுகிறார். படம் ரிலீஸாகி வசூல் முடிந்ததும் மௌணமாக இமயமலை சென்றுவிடுகிறார். சில அறிக்கைகளும் அதன் விளைவுகளும்
 
1996: ஜெ. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை அந்த ஆண்டவன் கூட காப்பாத்த முடியாது
 
விளைவு: அதே ஜெ. ஆட்சியில் பிற்காலத்தில் செழிப்பாகவே வாழ்ந்தார்.
 
2004: ஜெ. கூட்டணிக்கு வாக்களித்து விட்டேன், நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் ஆதரவளிக்கலாம்
 
விளைவு: ரசிகர்கள் குழப்பம்.
 
2014: சிங்கப்பூர் சிகிச்சை முடிந்தவுடன், ரசிகர்கள் தலைமிர்ந்து வாழ கண்டிப்பாக எதாவது
செய்வேன் 
 
விளைவு: அடுத்த படம் பற்றிய அறிவிப்பு
 
தமிழ்நாட்டில் சிஸ்டம் சரியில்லை என்கிறார். ஆனால் இவரது அரசியல் கொள்கை பற்றி
கேட்டால் தலை சுத்துது என்கிறார். ஏழு தமிழர் விடுதலைப் பற்றி கேட்டால் யாரு அந்த ஏழு பேர் என்கிறார். அடுத்த நாள் நான் இன்னும் முழுசா அரசியலில் இறங்கவில்லை என்ற விளக்கம் வேறு. கமல் துணையோடு சினிமாவுக்கு வந்தவர் அவரிடமே போய் அரசியல் கத்துக்கொடு  என்கிறார். 70 வயசுகிட்ட ஆச்சு, இனிமே எப்ப அரசியல் கத்து, முழுசா இறங்கி தமிழ்நாட்டை காப்பாத்துறது?

தலைவர்  என்று சொல்கிறார்கள். பேட்டி/கேள்வி என்றால் நடுக்கம். யாரவது டயலாக் எழுதி
கொடுக்காவிட்டால் என்ன பேசுவதென்றே தெரியாமல் குழம்பிவிடுகிறார். இவரை விட நல்ல தலைவர்கள் தமிழ்நாட்டில் அல்லது ஏன் இந்தியாவிலேயே இல்லையா? சிந்தியுங்கள் மக்களே.
 
அரசியல் தகுதி?
ஒரு இந்திய குடிமகன் என்பதைத் தாண்டி ரஜினிக்கு என்ன அரசியல் தகுதி இருக்கிறது. சினிமாத் துறையில் ஒரு வணிகரீதி நடிகனாக சாதித்தவர். ரசிகர் கூட்டம் உள்ளது என்று சொல்லலாம், அது அவருக்கு அமைந்த ஒரு வாய்ப்பே தவிர அரசியல் தகுதி ஆகாது. சினிமாவைத் தாண்டி சமூக ஆர்வம் எதையும் காட்டவில்லை. சினிமாவில் நடிப்பதை மட்டுமே நம்பி ஓட்டு போட்டால், தமிழர்கள் சினிமா மட்டும் தான் பார்க்கமுடியும்.
 
அரசியல் விளம்பரமா?
ரசிகர் கூட்டம் கலைந்து விடாமல் இருக்கவும், தனது படங்களுக்கு வசூல் குறையாமல் இருக்கவும் இந்த அரசியல் யுக்தியை தவறாக கையாள்வதாகத் தெரிகிறது. ரஜினி படங்கள் பெரும்பாலும் வெற்றியடைகின்றன என்று வாதிடலாம். அப்படியென்றால் அரசியலுக்கு வர மாட்டேன்; நான் ஒரு நடிகன் மட்டுமே என்று தெளிவு படுத்திவிடலாமே. ஏனெனில் மக்களின் செல்வாக்கை தக்கவைத்துக் கொள்ளவேண்டும் கடைசி பைசா வரை வந்து சேரவேண்டும் அல்லவா? அதற்கு தான் இந்த அரசியல் விளம்பரம்.

 
சினிமா வியாபாரியா?
ஜெயலலிதா, கருணாநிதி போன்ற தலைவர்கள் மறைவிற்குப் பிறகு தமிழகத்தில் வெற்றிடம் நிலவுகிறது என்கிறார். உண்மையிலேயே தமிழகத்தின் மீது ஒரு துளி அக்கறையாவது இருந்தால், உடனடியாக அனைத்து படத்திட்டங்களையும் உதறிவிட்டு அரசியலில் குதித்திருக்கலாமே? இன்னும் படம் நடிக்கவேண்டிய அவசியம் என்ன? கடைசிவரை பணம்/புகழ் வேண்டும் அவ்வளவு தான். ஒரு நடிகனாக சாகும் வரை நடிக்கலாம் தவறில்லை. ஆனால் அரசியலுக்கு வருவேன் தமிழ்நாட்டிற்கு நல்லது பண்ணுவேன் என்று சொல்லி அப்பாவி மக்களை ஏமாற்றுவது சினிமா வியாபாரியின் தந்திரமே தவிர, நல்ல தலைவனுக்காக அடையாளமில்லை.

இது போன்ற வியாபாரிகள், அரசியலுக்கு வந்தாலும் உங்கள் ஓட்டுக்களை வாங்கி வியாபாரம் செய்துவிடுவார்கள் மக்களே. எச்சரிக்கையோடு செயல்படுங்கள்!


--வெங்கட் நடராஜன்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்