உடல் நலக்குறைபாடு காரணமாக அவதிப்பட்டு வந்த சேலம் சுகவனேஸ்வரர் கோவில் யானை ராஜேஸ்வரி இன்று மரணமடைந்தது.
40 வருடங்களாக, சுகவனேஸ்வரர் கோவிலில் பராமரிக்கப்பட்டு வந்த ராஜேஸ்வரி என்கிற யானை நோய்வாய்ப்பட்டு எழுந்து நடக்க முடியாமல், படுத்த படுக்கையாக கிடந்தது. மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்தும் எந்த பலனும் இல்லாததால், அந்த யானையை கருணைக் கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதை விசாரித்த நீதிமன்றம் யானையை கருணைக்கொலை செய்ய அனுமதி அளித்தது. ஆனால், அதற்கு சில விலங்கு நல ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், யானையின் உடலில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதால், கருணைக் கொலை செய்யக்கூடாது என கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்நிலையில், இன்று காலை ராஜேஸ்வரி யானை மரணம் அடைந்தது. இந்த விவகாரம் சேலம் சுகவனேஸ்வரர் கோவிலுக்கு பல வருடங்களாக வந்து செல்லும் பக்தர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.