ஐபிஎல் ஏலம்: வீரர்கள் தேர்வில் வித்தியாசம் காட்டிய சிஎஸ்கே - அணியை ஆட்டிப்படைக்கும் மிகப்பெரிய குறை!

Prasanth Karthick

செவ்வாய், 26 நவம்பர் 2024 (12:07 IST)

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பாணி ஐபிஎல் தொடரில் எப்போதுமே வித்தியாசமாக இருக்கும். தோனி கேப்டனாக இருந்தவரை, சாதாரண வீரரை அணிக்குள் கொண்டுவந்துகூட அவரை துருப்புச் சீட்டாக மாற்றிவிடுவார்.

 

 

மற்ற அணிகள் பந்துவீச்சாளர்கள் மீது கவனம் செலுத்தும் போது பேட்டர்கள் மீது சிஎஸ்கே கவனம் செலுத்தும், மற்ற அணிகள் பேட்டர்கள் மீது கவனம் செலுத்தும்போது ஆல்ரவுண்டர்களை சிஎஸ்கே அள்ளிவிடும், வெளிநாட்டு வீரர்களை வாங்கும் போது, உள்நாட்டு வீரர்களை தேர்ந்தெடுத்து சிஎஸ்கே வாங்கும். இதுபோன்ற வித்தியாசமான அனுகுமுறையுடன்தான் சிஎஸ்கே அணி ஏலத்தில் பங்கேற்கும்.

 

அந்த வகையில் 2025-ஆம் ஆண்டு ஐபிஎல் டி20 சீசனுக்கான மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணி கடைபிடித்த அணுகுமுறை என்ன? சிஎஸ்கே அணி வாங்கிய வீரர்கள் யார், அணியின் பலம், பலவீனம், எதில் கோட்டைவிட்டது என்பது குறித்து பார்க்கலாம்.

 

5 வீரர்கள் தக்கவைப்பு
 

ஐபிஎல் ஏலம் தொடங்கிய போது சிஎஸ்கே அணி 5 வீரர்களைத் தக்கவைத்திருந்தது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, மதீஷா பதிராணா, எம்.எஸ்.தோனி ஆகிய 5 வீரர்களை தக்கவைத்தது. அதற்கான தொகை போக சிஎஸ்கே அணியிடம் ஏலம் தொடங்கும் போது ரூ.55 கோடி கையிருப்பு இருந்தது.

 

வெளிநாட்டு வீரர்கள் யார்?
 

இந்த ஏலத்தில் சிஎஸ்கே அணி 20 வீரர்களை விலைக்கு வாங்கியது. இதில் வெளிநாட்டு வீரர்களான டேவான் கான்வே(ரூ.6.25 கோடி), ரச்சின் ரவீந்திரா(ரூ.4 கோடி), நூர் அகமது(ரூ.10 கோடி), சாம் கரண்(ரூ.2.40கோடி), நாதன் எல்லிஸ்(ரூ.2 கோடி) ஜேமி ஓவர்டன்(ரூ.1.50கோடி) ஆகியோரையும் சிஎஸ்கே வாங்கியுள்ளது.

 

உள்நாட்டு வீரர்கள் யார்?
 

14 உள்நாட்டு வீரர்களை சிஎஸ்கே அணி வாங்கியது. இதில் ரவிச்சந்திரன் அஸ்வின்(ரூ.9.75 கோடி), ராகுல் திரிபாதி(ரூ.3.40 கோடி), கலீல் அகமது(ரூ.4.80 கோடி), விஜய் சங்கர் (ரூ.1.20 கோடி), அன்சுல் கம்போஜ் (ரூ.3.40 கோடி) தீபக் ஹூடா(ரூ.1.70கோடி), ஆன்ட்ரே சித்தார்த்(ரூ.30 லட்சம்), வன்ஸ் பேடி(ரூ.55 லட்சம்), ஸ்ரேயாஸ் கோபால்(ரூ.30 லட்சம்), ராமகிருஷ்ணா கோஷ்(ரூ.30 லட்சம்), கமலேஷ் நாகர்கோட்டி(ரூ.30 லட்சம்), குர்ஜப்நீத் சிங் (ரூ.2.20 கோடி), முகேஷ் சவுத்ரி(ரூ.30லட்சம்), ஷேக் ரசீத்(ரூ.30 லட்சம்) ஆகியோர் அடங்குவர்.

 

 

சுழற்பந்துவீச்சுக்கு முக்கியத்துவம்
 

சிஎஸ்கே அணி இந்த முறை ஐபிஎல் ஏலத்தில் தரமான சுழற்பந்துவீச்சாளர்கள் மீது கவனம் செலுத்தியுள்ளது. முந்தைய சீசன்களில் ஜடேஜா, சான்ட்னர், தீக்சனா ஆகியோர் மட்டுமே சுழற்பந்துவீச்சாளர்களாக சிஎஸ்கே அணியில் இருந்தனர்.

 

ஆனால், இந்த முறை சுழற்பந்துவீச்சுப் படையை வலுவாக கட்டமைக்கும் வகையில் வீரர்கள் தேர்வில் முக்கியத்துவம் அளித்தது. ரவீந்திர ஜடேஜா இருக்கும் நிலையில் ஆஃப்-ஸ்பின்னர் ரவிச்சந்திர அஸ்வினை வாங்கியுள்ளது. 2015-ஆம் ஆண்டுக்குப்பின் அஸ்வின் மீண்டும் சிஎஸ்கே அணிக்குள் சென்றுள்ளார்.

 

அடுத்ததாக இடதுகை சினாமென் ஸ்பின்னர், ஆப்கானிஸ்தான் வீரர் நூர் அகமதுவை ரூ.10 கோடிக்கு சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்துள்ளது. அஸ்வினை விட நூர் அகமதுவுக்கு அனுபவம் குறைவுதான் இருப்பினும் அஸ்வினுக்குரிய விலையைவிட கூடுதலாக ரூ.25 லட்சம் கொடுத்து ஏலத்தில் வாங்கியது.

 

சிஎஸ்கே அணியைப் பொருத்தவரை பவர்ப்ளே ஓவர்களை விட நடுப்பகுதியில்தான் வழக்கமாக எதிரணி விக்கெட்டுகளை வீழ்த்தி, அவர்களின் ரன்ரேட்டை கட்டுப்படுத்தும். அதற்காக அஸ்வின், ஜடேஜா, நூர் அகமது ஆகியோரை சிஎஸ்கே அணி வலுவாகப் பயன்படுத்தலாம். இதில் ரவீந்திரா அல்லது ஷிவம் துபே, அல்லது விஜய் சங்கர் ஆகியோர் இருந்தால் 5-வது பந்துவீச்சாளராக அணியில் பயன்படுத்தப்படுவார்கள்.

 

 

சுழற்பந்துவீச்சுக்கு அதிலும் மெதுவாக வீசப்படும் பந்துகளுக்கு நன்கு ஒத்துழைக்கும் விக்கெட்டுகளில் நூர் அகமது நன்கு பந்துவீசக்கூடியவர் என்பதால் இவரை சிஎஸ்கே தேர்ந்தெடுத்தது. இவர்கள் தவிர உள்நாட்டு வீரர் ஸ்ரேயாஸ் கோபால் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோரும் சுழற்பந்துவீச்சாளர்கள். இதில் ஜடேஜா, அஸ்வின் இருவரும் நடுவரிசை மற்றும் கீழ்வரிசையில் கடைசி நேரத்தில் நன்கு பேட் செய்யக்கூடியவர்கள் என்ற அம்சமும் இருக்கிறது.

 

வேகப்பந்துவீச்சில் பலவீனமா?
 

சிஎஸ்கே அணியில் வேகப்பந்துவீச்சுக்கு அதிகமான வீரர்கள் இருப்பதாக தோற்றம் அளித்தாலும் வலுவான பின்புலத்தைக் கொண்ட, இந்திய மண்ணிலும், வெளிநாட்டிலும் சிறப்பாக பந்துவீசிய பந்துவீச்சாளர்களைத் தேட வேண்டியுள்ளது.

 

ஆஸ்திரேலிய வீரர் நாதன் எல்லீஸ் ஒட்டுமொத்தமாக 150 டி20 போட்டிகளில் விளையாடிய அனுபவம் உள்ளவர் என்றாலும், சர்வதேச அளவில் 20 டி20 போட்டிகளில் தான் விளையாடியுள்ளார். ஆஸ்திரேலியாவில் நடக்கும் லீக் போட்டி, ஷெப்பீல்ட் தொடரில் விளையாடியவர் என்பதால் வலதுகை வேகப்பந்துவீச்சாளரான எல்லீஸை சிஎஸ்கே வாங்கியுள்ளது.

 

 

சி.எஸ்.கே. அணியில் கடந்த காலத்தில் விளையாடியுள்ள இங்கிலாந்தைச் சேர்ந்த வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான சாம் கரண், பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ஜேமி ஓவர்டன் ஆகியோரை வாங்கியுள்ளது. இதில் ஜேமி ஓவர்டன் 7 சர்வதேச டி20 போட்டிகளில்தான் விளையாடியுள்ளார். ஆனால், கராச்சி கிங்ஸ், சோமர்செட், கல்ப் கிங்ஸ், சர்ரே போன்ற கிளப்களில் விளையாடிய அனுபவம் அவருக்கு பலம் சேர்க்கிறது.

 

உள்நாட்டு வீரர்களில் விஜய் சங்கர், கமலேஷ் நாகர்கோட்டி, ராமகிருஷ்ணா கோஸ், அன்சுல் கம்போஜ் , குர்ஜாப்நீத் சிங், முகேஷ் சவுத்ரி ஆகியோரும் உள்ளனர்.

 

இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல். தொடர்களில் வேகப்பந்துவீச்சு என்பது பவர்ப்ளே, டெத் ஓவர்கள் மட்டும்தான், மற்ற 10 ஓவர்களிலும் ஆட்டத்தைத் திருப்ப சுழற்பந்துவீச்சாளர்கள்தான் பயன்படுவார்கள் என்பதால், அதன் பலத்தை சிஎஸ்கே அதிகப்படுத்தியுள்ளது. வேகப்பந்துவீச்சுக்கு முக்கியத்துவம் அளித்ததைப் போல் வெளித்தோற்றத்தில் இருந்தாலும், சிஎஸ்கே வேகப்பந்துவீச்சு என்பது காற்றடைத்த பலூன்தான்.

 

ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட் வீழ்த்திய வீரர்
 

இதில் ஹரியானா வேகப்பந்துவீச்சாளர் அன்சுல் கம்போஜ் எனும் வீரரை ஏலத்தில் ரூ.3.40 கோடிக்கு சிஎஸ்கே வாங்கியது. சமீபத்தில் ரஞ்சிக் கோப்பையில் கேரள அணிக்கு எதிராக கம்போஜ் ஒரே இன்னிங்ஸில் 49 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை எடுத்ததால் அவரை போட்டிபோட்டு வாங்கியுள்ளது.

 

 

ரஞ்சிக் கோப்பையில் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய 3வது வீரர், 39 ஆண்டுகளுக்குப் பின் சாதனை செய்தவர் எனும் பெருமையை கம்போஜ் பெற்றவர். கம்போஜ் அடிப்படை விலை ரூ.30 லட்சமாக இருந்த நிலையில், இவர் பெயர் அறிவிக்கப்பட்டதும் பஞ்சாப், டெல்லி அணிகள் போட்டியிட்டன. ஆனால் சிஎஸ்கே அவரை வாங்கிவிட்டது.

 

தமிழக அணியிலும் டிஎன்பிஎல் தொடரில் மதுரை பேந்தர்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியில் விளையாடிய வேகப்பந்துவீச்சாளர் குர்ஜப்நீத் சிங்கை ரூ.2.20 கோடிக்கு சிஎஸ்கே வாங்கியது. இடதுகை வேகப்பந்துவீச்சாளரான குர்ஜப்நீத் சிங் உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடவில்லை, முதல்தரப் போட்டிகளிலும் 10 ஆட்டங்களுக்குள்தான் பங்கேற்றுள்ளார் ஆனால் இவர் மீது நம்பிக்கை வைத்து சிஎஸ்கே வாங்கியுள்ளது.

 

ரஞ்சிக் கோப்பையில் சவுராஷ்டிரா அணிக்கு எதிரான முதல் ஆட்டத்திலேயே குர்ஜப்நீதி சிங் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார், புஜாராவை டக்அவுட்டில் வெளியேற்றினார் 4 போட்டிகளில் 13 விக்கெட்டுகளை அறிமுக சீசனிலேயே எடுத்தார் என்பதால் இவரை வாங்கியுள்ளது.

 

ஏலத்தில் குர்ஜப்நீத் சிங்கிற்கு ரூ.30 லட்சம் அடிப்படை விலையாக இருந்தது. ஆனால், பஞ்சாப், குஜராத் அணிகள் போட்டியிட்டதில் சிஎஸ்கே அணி இறுதியாக வென்றது. டெத் ஓவர்கள், பவர்ப்ளே ஓவர்களில் பந்துவீச குர்ஜப்நீத் சிங்கை சிஎஸ்கே பயன்படுத்தும். அஸ்வின், யோமகேஷ் ஆகியோரின் வழிகாட்டலில் குர்ஜப்நீத் சிங் தனது கிரிக்கெட் வாழ்க்கையை வளர்த்தவர் என்பதால் அவர் மீது சிஎஸ்கே கவனம் திரும்பியது.

 

இவர்கள் தவிர நாகர்கோட்டி, விஜய் சங்கர், கலீல் அகமது, ராமகிருஷ்ணா கோஷ் என வேகப்பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். சர்வதேச போட்டிகளில் பெரிதாக ஆடிய அனுபவம் அவர்களுக்கு இல்லை. இதில் விஜய் சங்கர், கலீல் அகமது ஆகிய இருவரும் உள்நாட்டில் அதிகம் விளையாடியிருந்தாலும் ஐபிஎல் களம் என்பது வேறு. விஜய் சங்கர், கலீல் அகமது ஆகிய இருவரும் சிறந்த வேகப்பந்துவீச்சாளர்கள் என்று சர்வதேச தளத்தில் அங்கீகாரம் பெறவில்லை.

 

மதீஷா பதிராணாவை சிஎஸ்கே அணி தக்கவைத்துள்ளது என்றாலும், ஐபிஎல் போன்ற அதிரடியான களத்தில் பதிராணாவின் பந்துகளும் பறக்கவிடப்படும். ஐபிஎல் தொடரில் டெத் ஓவர்களிலும், பவர்ப்ளேயில் பந்துவீசிய பதிரணா சர்வதேச தளத்துக்கு இலங்கை அணியில் விளையாடிய போது பெரிதாக ஜொலிக்க முடியவில்லை.

 

சிஎஸ்கே அணியில் சர்வதேச தரத்துக்கு வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லை என்பது மிகப்பெரிய குறையாகும். அனுபவம் குறைந்த, உள்நாட்டில் மட்டும் விளையாடிய இளம் வீரர்களை மட்டும் வைத்துக்கொண்டு களத்தில் இறங்குகிறது.

 

பதிரணா, நாதன் எல்லீஸ், எவர்டன் போன்றோர் எந்த அளவுக்கு டெத் ஓவர்களிலும், பவர்ப்ளேயிலும் திறமையாகப் பந்துவீசுவார்கள் என்பது சந்தேகம்தான்.

 

ஆல்ரவுண்டர்களை அள்ளிய சிஎஸ்கே
 

கடந்த 2008-ஆம் ஆண்டு ஏலத்தில் இருந்தே சிஎஸ்கே அணி ஏலத்தில் ஆல்ரவுண்டர்களுக்கு அதிகம் முக்கியத்துவம் அளிக்கும். அதுபோல் இந்த முறையும் 10 ஆல்ரவுண்டர்களை சிஎஸ்கை வைத்துள்ளது.

 

ஜடேஜா, ஷிவம் துபே, அஸ்வின், சாம் கரண், ரச்சின் ரவீந்திரா, விஜய் சங்கர், கம்போஜ், ஓவர்டன், நாகர்கோட்டி, ராமகிருஷ்ணா கோஷ் என பட்டியல் பெரிதாக இருந்தாலும் நெருக்கடி நேரத்தில் ஆல்ரவுண்டர்களாக ஜொலிப்பது சிலர் மட்டும்தான்.

 

ஆல்ரவுண்டர்கள் வரிசையிலும் பலர் இருந்தாலும் இதில் ஓரளவுக்கு அனுபவம் இருக்கும் ஜடேஜா, அஸ்வின், ரவீந்திரா, சாம் கரண், விஜய் சங்கர் ஆகியோர் தான் இக்கட்டான நேரத்தில் கைகொடுக்கக் கூடியவர்கள்.

 

சிஎஸ்கே பேட்டிங் வரிசை எப்படி?
 

கடந்த சீசன்களில் தொடக்க வீரராக ரச்சின் ரவீந்திராவை களமிறக்கி பல போட்டிகளில் சிஎஸ்கே அணி கையைச் சுட்டுக்கொண்டது. ஆதலால் கெய்க்வாட்டுடன் சேர்ந்து டேவன் கான்வே களமிறங்கலாம். காயத்தால் கான்வே கடந்த சீசனில் விளையாடவில்லை.

 

வரும் சீசனில் ரவீந்திரா 3வது வீரராக களமிறக்கப்படலாம். நடுவரிசையைப் பலப்படுத்த அம்பதி ராயுடு இடத்தில் ராகுல் திரிபாதி, ஷிவம், ஜடேஜா, ஆகியோரும் கீழ்வரிசைக்கு தோனி, சாம் கரண், அஸ்வின் ஆகியோரும் இருக்கிறார்கள்.

 

 

பேட்டர்களைப் பொருத்தவரை சிஎஸ்கே அணியில் வலுவான வீரர்கள் இருக்கிறார்கள். 8வது வீரர் வரை அதிரடியாக விளையாடக் கூடியவர்கள் என்பதால், பெரிய ஸ்கோர் சேர்க்கும் திட்டத்துடன் சிஎஸ்கே செயல்படும். ஐபிஎல் தொடரில் 200 ரன்களுக்கு மேல் அடித்துவிட்டாலே எதிரணிக்கு அழுத்தத்தை ஏற்படுத்தி எளிதாக வென்றுவிடலாம் என்ற உத்தியை வெற்றிகரமாக செயல்படுத்தவே சிஎஸ்கே அணி ஆல்ரவுண்டர்களை அதிகம் எடுத்து, கடைசி வரிசை வரை பேட்டிங்கை பலப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு ஐ.பி.எல் ஏலத்தில் வீரர்களை தேர்வு செய்வதில் சென்னை அணி அதற்கேற்ற அணுகுமுறையையே கடைபிடித்தது.

 

இம்பாக்ட் ப்ளேயர்
 

கடந்த இரு சீசன்களிலும் இம்பாக்ட் ப்ளேயர் விதி பலதாக்கங்களை ஒவ்வொரு அணியிலும் ஏற்படுத்தி வருகிறது ஆட்டத்தை திருப்பும் கருப்பு குதிரைகளாக இவர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் சிஎஸ்கே அணியில் கடந்த சீசன்களில் ஷிவம் துபே இருந்து வந்தார், இந்த முறை அவருடன் சேர்ந்து விஜய் சங்கர், நூர் அகமது, அன்சுல் கம்போஜ், அதிரடி பேட்டிங்கிற்கு தீபக் ஹூடா ஆகியோர் பயன்படுத்தப்படலாம்.

 

சிஎஸ்கே உத்தேச அணி

கெய்க்வாட்(கேப்டன்),டேவன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி, ஷிவம் துபே, எம்எஸ் தோனி, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், ஓவர்டன் அல்லது நாதன் எல்லீஸ் அல்லது கலீல் அகமது, பதிரணா

 

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்