வயநாட்டிற்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறிய காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியும், அவரது சகோதரி பிரியங்கா காந்தியும், தூத்துக்குடி வெள்ளத்தின்போது ஏன் வரவில்லை என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னையில் தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், வயநாட்டில் ஏற்பட்டிருப்பது கொடுந்துரயம் என்றார். இந்த துயரத்தில் நாங்கள் பங்கேற்கிறோம் என்றும் இது ஒரு எச்சரிக்கை என்றும் தெரிவித்தார்.
ஆனால் கேரளா, உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசத்திற்கு விடுத்த எச்சரிக்கை என்று மட்டும் நினைக்க கூடாது என குறிப்பிட்ட சீமான், நமக்கும் இதுபோன்ற பாதிப்பு வராது என்று நிம்மதியாக இருக்க முடியாது என்று தெரிவித்தார். எனவே கவனமாக இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
வயநாட்டிற்கு ராகுல் காந்தியும், அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் ஓடி வந்து பார்த்தது மகிழ்ச்சிதான் என்று அவர் தெரிவித்தார். உங்கள் தொகுதி என்பதால் ரூ.1 கோடி நிவாரணம் அறிவிக்கிறீர்கள், ஓடி வந்து பார்க்கிறீர்கள். ஆனால், நாங்கள் தூத்துக்குடியில் வெள்ளத்தில் தத்தளித்துக்கொண்டிருந்த போது எங்களை வந்து பார்க்கவில்லையே, எதுவுமே செய்யவில்லையே என்று சீமான் ஆதங்கமாக குறிப்பிட்டார்.