தனியாக ஒரு கோவிலைக் கட்டி, சாதிய ஆதிக்கத்தை நிலைநாட்ட முற்படுவதா? சீமான் கேள்வி

Sinoj

சனி, 3 பிப்ரவரி 2024 (21:30 IST)
தென்முடியனூர் மாரியம்மன் கோவிலில் ஆதித்தொல்குடி மக்கள் வழிபாடு செய்ததால், தனியாக ஒரு கோவிலைக் கட்டி, சாதிய ஆதிக்கத்தை நிலைநாட்ட முற்படுவதா? என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

''திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டை அடுத்த தென்முடியனூர் கிராமத்திலுள்ள முத்துமாரியம்மன் கோவிலுக்குள் ஆதித்தொல்குடி மக்கள் சென்று வழிபட்டதால் அங்குள்ள ஒரு பிரிவினர் தனியாகக் கோவில் கட்டத் தொடங்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சத்தில் நிற்கும் தற்காலத்திலும், சாதியெனும் நோய்பிடித்து சகமனிதனை ஒதுக்கிப் புறந்தள்ளும் போக்குகள் தொடர்வது கடும் கண்டனத்திற்குரியது. ஒரே மொழி பேசி, ஒரு தாய் வயிற்று மக்களாய் இரத்தமும் - சதையுமாக, உயிரும் - உணர்வும் கொண்டு நம்முடன் வாழும் சக மனிதர்களை ஒதுக்கி வைக்கும் இத்தீண்டாமைச் செயல்பாடு துளியும் ஏற்புடையதல்ல.

எல்லோருக்கும் பொதுவாக இருக்க வேண்டிய வழிபாட்டுத்தலங்களே சாதி எனும் சனாதனக்கட்டமைப்புக்கு இரையாகியிருப்பது மானுடம் வெட்கித் தலைகுனிய வேண்டிய இழிநிலையாகும். தமிழ்நாடு அரசினுடைய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலிருக்கும் அக்கோவிலுக்குள் செல்லவே ஆதித்தொல்குடி மக்களுக்கு இத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கிறது என்பதுதான் சாதியொழித்து, சமத்துவம் வளர்த்த திராவிட கட்சிகளின் 57 ஆண்டுகால ஆட்சியின் சாதனையாகும்

திராவிடத்தின் ஆட்சியில் சாதிய கொடுமைகள் தமிழ்நாட்டின் கடைக்கோடிவரைப் புரையோடியதோடு மட்டுமில்லாது, அவை பரிணாம வளர்ச்சியினைப் பெற்று, வெவ்வேறு வடிவங்களில் அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்பட்டு, இன்றுவரை நிலைகொண்டிருப்பது திராவிட அரசியல் கோட்பாட்டின் படுதோல்வியையே காட்டுகிறது. சாதியத்துக்கெதிராக வீரியமாகச் செயல்பட்டு அதனை வீழ்த்த முற்படாது, வெற்று மேடை முழக்கமாய் சாதியொழிப்பு பேசி, அடையாள அரசியலும், விளம்பர அரசியலும் செய்ததோடு ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ளவும், அற்ப அரசியல் லாபத்திற்காகவும் மறைமுகமாக சாதிப்பிரிவினைகளை வளர்த்தெடுத்த திராவிடக்கட்சிகளே தமிழ் மண்ணில் தற்போது நிகழும் சாதிய வன்முறைகளுக்கு முழுப்பேற்க வேண்டும்.

ஆகவே, தென்முடியனூர் மாரியம்மன் கோயிலில் அனைத்து மக்களுக்குமான வழிபாட்டு உரிமையை உறுதிசெய்வதோடு, சாதி அடிப்படையிலான ஒதுக்கல் செயல்பாடுகளை கைவிடச்செய்து, ஒரே கோவிலில் அனைத்துத்தரப்பு மக்களும் வழிபாடு செய்யும் வகையில் சமத்துவத்தையும், சமூக நல்லிணக்கத்தையும் நிலைநாட்ட வேண்டுமென ஆளும் திமுக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்''என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்