தமிழகம் மற்றும் புதுவை ஆகிய இரண்டு மாநிலங்களையும் மிரட்டிக் கொண்டிருந்த நிவர் புயல் இன்று அதிகாலை கரையை கடந்தது என்பதும் இரு மாநிலங்களையும் இந்த புயல் ஆட்டுவித்து வந்தது என்பதையும் பார்த்தோம்
இந்த நிலையில் புயல் குறித்த சேத மதிப்பீடு தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது. முதல்கட்டமாக புதுவையில் நிவர் புயலால் 400 கோடி ரூபாய்க்கு சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் எனவே மத்திய அரசு அந்த நிதியை வழங்க வேண்டும் என்றும் புதுவை மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்
அதற்கு முன்னதாக இடைக்கால நிவாரணமாக ரூபாய் 50 கோடி ரூபாய் மத்திய அரசு உடனே புதுவை அரசுக்கு வழங்க வேண்டும் என முதல் அமைச்சர் நாராயணசாமி பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது நிவர் புயலால் முதல்கட்ட கணக்கெடுப்பு சோதனையில் 820 ஏக்கர் நிலம் விவசாய நிலமும், 200 ஹெக்டேர் காய்கறித் தோட்டங்களும் 160 ஹெக்டேர் கரும்பு தோட்டங்களும் 7 ஹெக்டேர் வெற்றிலை தோட்டங்களும் 55 ஹெக்டேர் வாழைத் தோட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் மத்திய அரசு புதுவை அரசுக்கு 400 கோடி ரூபாய் இழப்பீடு தரவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்
இதே போல் தமிழக அரசும் நிவர் புயலால் ஏற்பட்டுள்ள சேதம் குறித்த கணக்கெடுப்பு நடத்தி வருவதாகவும் விரைவில் தமிழக முதல்வரும் பிரதமர் மோடிக்கு இது குறித்து கடிதம் எழுதுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது