நீதிமன்றத்தில் வழக்கு ; கடும் எதிர்ப்புகள் : சென்னையில் ஐ.பி.எல் போட்டி நடைபெறுமா?

Webdunia
புதன், 4 ஏப்ரல் 2018 (16:44 IST)
கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளதால் சென்னையில் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி நடைபெறுமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

 
உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின்பும் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை. இது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுக உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் தீவிரமாக போராட்டங்களை முன்னெடுத்துள்ளன.
 
இந்நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் வருகிற 10ம் தேதி ஐ.பி.எல் போட்டி நடைபெறவுள்ளது. காவிரி விவகாரம் பூதாகரமாகியுள்ள இந்த சூழ்நிலையில், இந்த போட்டிக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.
 
காவிரி பிரச்சனை சர்வதேச கவனத்தை பெற ஐ.பி.எஸ் கிரிக்கெட் ஆட்டத்தை நாம் தவிர்க்க வேண்டும் என இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதேபோல், இந்த போட்டி நடைபெற்றால் மைதானத்தில் புகுந்து போட்டியை நிறுத்துவோம். வீரர்களை சிறை பிடிப்போம் என தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ கூறியுள்ளார். மேலும், லட்சக்கணக்கான இளைஞர்களை திரட்டி சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தின் முன்பு முற்றுகை போராட்டம் நடத்துவோம் என விவசாயிகளின் ஒருங்கிணைப்பு குழு  தலைவர் பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார். 

 
அதேபோல், காவிரி மேலாண்மை வாரியம் அமையும் வரை தமிழகத்தில் ஐ.பி.எஸ் போட்டி நடத்தக்கூடாது. அப்படி நடத்தினால் டிக்கெட் வாங்கி மைதானத்திற்குள் சென்று ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்துவோம் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் சென்னை கமிஷன் அலுவலகத்தில் மனுவும் அளித்துள்ளார். 
 
இது போதாது என, சூதாட்டத்தை தடை செய்யாமல் இந்த ஆண்டு ஐ.பி.எஸ் போட்டிகளை நடத்த அனுமதிக்கக் கூடாது என சூதாட்ட புகாரில் சிக்கி சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரி சம்பத்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
 
இப்படி பல்வேறு வகையில் ஐ.பி.எல் போட்டிக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதால், இந்த வருடம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடைபெறுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்