ரவுடிகளை கூண்டோடு அள்ளிய போலீசார் : முக்கிய குற்றவாளி என்ன ஆனார்?

Webdunia
புதன், 7 பிப்ரவரி 2018 (14:20 IST)
சென்னை பூவிருந்தவல்லி அருகே உள்ள மலையம்பாக்கத்தில்  நேற்று இரவு நடைபெற்ற பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட ரவுடிகளை போலீசார் கைது செய்துள்ள நிலையில், அந்த விழாவின் நாயகன் ரவுடி பினு என்னவானார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

 
சென்னை பள்ளிக்கரணை பகுதியில் நேற்று இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியே மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் ஏராளமானோர் வந்தனர். போலீசார் விசாரித்ததில், பூவிருந்தவல்லி அருகேயுள்ள மலையம்பாக்கம் என்ற இடத்தில் உள்ள பண்ணை வீட்டில் தங்களின் நண்பர் பினுவின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக தெரிவித்தனர்.
 
சூளைமேடு பகுதியை சேர்ந்த பினு ஏற்கனவே தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர். பல கொலை வழக்குகளில் தொடர்புடையவர். எனவே, சுதாரித்த போலீசார், உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பின் தனிப்படை அமைக்கப்பட்டு, 60க்கும் மேற்பட்ட போலீசார் தனியார் வாடகை காரில்  சென்று, அந்த பண்ணை வீட்டிற்கு சென்றனர். அப்போது அங்கு 100க்கும் மேற்பட்ட ரவுடிகள் கூடியிருந்தனர்.

அவர்களை சுற்றி வளைத்த போலீசார், 70க்கும் மேற்பட்ட ரவுடிகளை துப்பாக்கி முனையில் கைது செய்தனர். 30க்கும் மேற்பட்ட ரவுடிகள் அங்கிருந்து தப்பிவிட்டனர். அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான இரு சக்கர வாகனங்கள் மற்றும் ரவுடிகளிடமிருந்த பயங்கர ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
 
ஆனால், பிறந்த நாள் நாயகனான, போலீசாரால் தேடப்பட்ட ரவுடி பினு என்னவானார் என இதுவரை தெரியவில்லை. அவர் கைது செய்யப்பட்டாரா அல்லது தப்பிவிட்டாரா எனவும் போலீசார் எந்த தகவலும் கூறவில்லை. 
 
இந்நிலையில், ரவுடி பினுவுக்கும், போலீசாருக்கும் ஏற்பட்ட ரகசிய உடன்பாடு காரணமாக, அனைத்து ரவுடிகளும் அங்கு வரவழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் செய்தியும் ஒரு பக்கம் பரவி வருகிறது. பினு என்னவானார் என போலீசார் வெளிப்படையாக கூறாத வரை இந்த சந்தேகம் நீடிக்கும் எனத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்