சாதிய கொலைக்கு ஆதரவு; வசமாக சிக்கிய கட்டெறும்பு! – கைது செய்த போலீஸ்!

Webdunia
ஞாயிறு, 4 ஜூன் 2023 (12:11 IST)
கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆதரவாகவும், பொது அமைதியை குலைக்கும் விதமாகவும் பதிவிட்ட ட்விட்டர் கட்டெறும்பு காவல் துறையால் கைது செய்யப்பட்டார்.



கடந்த 2015ம் ஆண்டு கோகுல்ராஜ் திருசெங்கோடு பகுதியில் மர்மமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுத்தொடர்பாக திருசெங்கோடு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை தலைவர் யுவராஜும் அவரது ஆட்களும் கோகுல்ராஜை கொன்றது தெரியவந்தது.

இதுதொடர்பாக விசாரணை தொடர்ந்து நடந்து வந்த நிலையில் தற்போது யுவராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் உள்ளிட்ட 10 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டதை சென்னை உயர்நீதிமன்றமும் உறுதிப்படுத்தியுள்ளது. இதுதொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில் ட்விட்டரில் கட்டெறும்பு என்ற பெயரில் வலம் வந்த நபர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜுக்கு அதரவாக பொது அமைதியை குலைக்கும் விதமாக ட்விட்டரில் இட்ட பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுத்த போலீஸார் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த கட்டெறும்பை கைது செய்தனர். விசாரணையில் கட்டெறும்பின் நிஜப்பெயர் இசக்கி என தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட கட்டெறும்பு என்னும் இசக்கி தான் செய்தது தவறு என்றும், இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டேன் என்றும் போலீஸாரிடம் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்