மோடி பிரதமர் பதவியில் நீடிப்பது இன்னும் பேராபத்தையே கொண்டுவரும்: திருமாவளவன் அறிக்கை!

Webdunia
திங்கள், 19 ஏப்ரல் 2021 (06:57 IST)
பிரதமர் மோடி இன்னும் பதவியில் இருப்பது நாட்டிற்கு பேராபத்தை கொண்டு வரும் என்றும் அதனால் அவர் கொரோனா வைரஸ் உயிர்பலிகளுக்கு பொறுப்பு ஏற்று உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது
 
இந்தியா முழுவதும் கொரோனா கொடுந்தொற்றின் இரண்டாவது அலை கடுமையாக மக்களைத் தாக்கிக் கொண்டிருக்கிறது. இலட்சக் கணக்கானோர் இதனால் பாதிப்புக்கு ஆளாகி இருக்கின்றனர். ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகிக் கொண்டிருக்கின்றன. போதுமான கால அவகாசம் இருந்தும் கொரோனாவைக் கட்டுப்படுத்தத் தவறியதோடு பல்லாயிரக்கணக்கான உயிர் இழப்புகளுக்கும் காரணமாகியிருக்கும் பிரதமர் மோடி இந்த நிலைக்குத் தார்மீகப் பொறுப்பேற்று தனது பதவியை விட்டு விலக வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
 
கொரோனா கொடுந்தொற்று முதல் அலையைவிட தற்போது பாதிப்பு அதிக அளவில் உள்ளது. இதனிடையில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு அதன் உற்பத்தியில் உலகிலேயே இந்தியா முதலிடம் வகித்து வருகிறது. இங்கு தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளை மக்களுக்கு முறையாகப் போட்டிருந்தால் இந்த அளவுக்குப் பாதிப்பு ஏற்பட்டு இருக்காது. மாறாக தடுப்பூசிகளை அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததோடு இந்திய நாட்டு மக்களின் பாதுகாப்பைப் பற்றி எவ்வித கவலையும் இல்லாமல் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவதிலேயே மோடி கவனமாக இருந்தார். ஒவ்வொரு நாளும் இலட்சக்கணக்கில் கொரோனா தொற்றுகள் கண்டறியப்படும் இந்தச் சூழலிலும் கூட மேற்குவங்கத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.
 
மாநில அரசுகள் சுயேச்சையாக எந்த முடிவையும் எடுக்க முடியாமல் அவர்களது கைகள் கட்டப்பட்டிருக்கின்றன. மாநில அரசுகள் தடுப்பூசிகளை நேரடியாகக் கொள்முதல் செய்துகொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தால் இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டிருக்காது. தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கென உருவாக்கப்பட்ட 'பிஎம்ஜிகேபி' இன்சூரன்ஸ் திட்டத்தையும் மோடி அரசு கடந்த மார்ச் 24 ஆம் தேதியோடு நிறுத்திவிட்டது. மோடி அரசு எந்த அளவுக்கு மக்களின் உயிர்கள் மீது அக்கறை இல்லாமல் இருக்கிறது என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும்.
 
கொரோனாவைக் எதிர்கொள்வதில் எந்தவொரு தொலைநோக்குப் பார்வையும் பிரதமர் மோடிக்கு இல்லை என்பதற்குக் கடந்த ஆண்டு எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் அவர் எடுத்த ‘லாக்டவுன்' முடிவு ஒரு சான்றாகும். மக்களின் உயிர்மீது எவ்வித அக்கறையும் இல்லாமல் நாட்டைக் கடுமையான சுகாதார மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாக்கி இருக்கும் மோடி பிரதமர் பதவியில் நீடிப்பது இன்னும் பேராபத்தையே கொண்டுவரும். எனவே, தற்போது நாட்டில் நிலவும் சுகாதார நெருக்கடி நிலைக்குத் தார்மீகப் பொறுப்பேற்று உடனடியாக அவர் தனது பதவியிலிருந்து விலக முன்வரவேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம் 
 
இவ்வாறு திருமாவளவன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்