தனக்கு வேண்டியவர்களை பணியமர்த்த தி.மு.க. முடிவெடுத்து இருக்கிறதோ? ஓ.பன்னீர்செல்வம்

Webdunia
வெள்ளி, 17 நவம்பர் 2023 (20:48 IST)
தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகளில் உள்ள 2,534 தொடக்க நிலைப் பணியிடங்கள் அண்ணா பல்கலைக்கழகம் வாயிலாக தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் நிரப்பப்படும் என அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என முன்னாள்  முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது :
 
''தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பின், 07-01-2022 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய கூடுதல் செயற்பணிகள் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டு, மேதகு ஆளுநரின் ஒப்புதலுக்குப் பின் சட்டமாக்கப்பட்டது. இதன்படி, மாநில பொதுத் துறை நிறுவனங்கள், மாநகராட்சிகள், சட்டமுறை வாரியங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின்மூலம் நிரப்பப்பட வேண்டும். இதற்கு முற்றிலும் முரணாக, தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகளில் உள்ள 2,534 தொடக்க நிலைப் பணியிடங்கள் அண்ணா பல்கலைக்கழகம் வாயிலாக தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் நிரப்பப்படும் என அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது கடும் கண்டனத்திற்குரியது. 
 
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்பட வேண்டிய பணியாளர் 
நியமனத்தை அண்ணா பல்கலைக்கழகம் வாயிலாக நடத்துவது என்பதோடு மட்டுமல்லாமல், தொடக்க நிலைப் பணிகளுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படும் என்பது இளைஞர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தொகுதி 4, தொகுதி 2A மற்றும் தொடக்கநிலை பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது. இதேபோன்று, மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தொடக்க நிலை பணியிடங்களுக்கும் நேர்முகத் தேர்வு கிடையாது. இந்த நிலையில். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளிலுள்ள தொடக்க நிலை பணியிடங்கள் அண்ணா பல்கலைக்கழகம் வாயிலாக தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் நிரப்பப்படும் என்பது முறைகேட்டிற்கு வழிவகுக்கும். இதன்மூலம், தனக்கு வேண்டியவர்களை மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பணியமர்த்த தி.மு.க. முடிவெடுத்து இருக்கிறதோ என்ற சந்தேகம் இளைஞர்கள் மனதில் எழுந்துள்ளது. எதிர்கால சமுதாயத்தினரின் சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்ப மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார் .

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்