வங்கக் கடலில் உருவான நாடா புயல் கரையை கடந்துள்ள நிலையில் தற்போது புதிய காற்றழுத்த தாழ்வு வங்கக் கடலில் உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு காரைக்காலுக்கு 90 கி.மீ தொலைவில் நிலை கொண்டிருந்தது. இது புயலாக மாறி இதற்கு நாடா என பெயரிடப்பட்டது. இதனையடுத்து வலுவிழந்த நாடா புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று அதிகாலை கடலூர் காரைக்கால் இடையே கரையை கடந்தது.
இந்நிலையில் காரைக்காலுக்கு 20 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் எனவும் இதனால் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும் எனவும், சில இடங்களில் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கடலூரில் 54 கி.மீ வேகத்தில் காற்று வீசியதாக பதிவாகியுள்ளது சூறைக்காற்று வீசுவதால் மீனவர்கள் யாரும் அடுத்த 12 மணி நேர்த்திற்கு கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.