கடும் வறட்சியால் கால்நடைகள் உயிரிழப்பு..! சுமார் 50 பசு மாடுகள் பலி..!!

Senthil Velan
வியாழன், 2 மே 2024 (12:02 IST)
கோடை வெயில் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவுவதால் மசினகுடி பகுதியில் கடந்த இரண்டு வாரங்களில் சுமார் 50 பசுமாடுகள் உயிரிழந்த சம்பவம் கால்நடை வளர்ப்போர் மத்தியில் கவலையும், கலக்கமும் ஏற்பட்டுள்ளது. 
 
தமிழகத்தில் வரலாறு காணாத அளவிற்கு கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. வெப்ப அலை வீசுவதால் பகல் நேரங்களில் வெளியே வர முடியாத நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
 
பல்வேறு மாவட்டங்களில் 100  டிகிரியைத் தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது. குறிப்பாக மலைப்பிரதேசங்களிலும் கோடை வெயில் தனது கோர தாண்டவத்தை காட்டி வருகிறது.  இந்நிலையில் நீலகிரி மாவட்டத்திலும் கோடை வெயில் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் கூடலூர், மசினகுடி, முதுமலை பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. வனத்தில் பசுந்தீவனங்கள் இல்லாததால் கால்நடைகள், வனவிலங்குகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 
 
மேலும் நீர் நிலைகளும் வறண்டு விட்டது. இதனால் போதிய சத்துக்கள் கிடைக்காமல் மசினகுடி பகுதியில் உள்ள விவசாயிகள் பால் உற்பத்தியாளர்களின் பசுமாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக உயிரிழந்து வருகிறது. கடந்த 2 வாரங்களுக்கு மேலாக சுமார் 50 பசு மாடுகள் உயிரிழந்துள்ளது. மேலும் கோடை மழையும் இதுவரை பெய்யாமல் உள்ளதால் கால்நடை வளர்ப்போர் மத்தியில் கவலையும், கலக்கமும் ஏற்பட்டுள்ளது. 
 
இதுவரை இல்லாத வகையில் தொடர் வறட்சியால் மேய்ச்சல் நிலங்களில் பசுந்தீவனங்கள் இல்லாமல் காய்ந்து விட்டது என்றும் பால் உற்பத்தி தொழிலும் கடுமையாக சரிந்து விட்டது என்றும் மசினகுடி பகுதி விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
 
இது தொடர்பாக அதிகாரிகளும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர் என்று புகார் கூறியுள்ளனர். உயிரிழந்த கால்நடைகளுக்கு தமிழக அரசு நிவாரணத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்