நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்பதை அடுத்து, இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் இன்று உஷாருடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
இளநிலை மருத்துவப் படிப்பிற்கு நீட் தேர்வு கட்டாயம் என கடந்த சில ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை அனைத்து அரசியல் கட்சிகளும் நீட் தேர்வு எதிராக குரல் கொடுத்தாலும், மாணவர்கள் வேறு வழியின்றி நீட் தேர்வுக்கு தயாராகி தேர்வு எழுதி வருகின்றனர்.
நீட் தேர்வுக்கு பின்னர் எம்பிபிஎஸ் சீட் பெற்று மருத்துவக் கல்விக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், 2025-26ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வுக்கு இன்று மாலைக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
கடந்த மாதம் 7ஆம் தேதி தொடங்கிய விண்ணப்ப பதிவு இன்றுடன் நிறைவடைகிறது. மேலும், விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள மார்ச் 9, 10, 11 ஆகிய தேதிகளில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.