தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை போன்ற தென் மாவட்டங்களில் தாது மணல் எடுத்து வரும் வைகுண்டராஜன் தாது மணல் கடத்தியதாக அவரது சகோதரர் குமரேசன் சமீபத்தில் பரபரப்பு புகார் கூறியிருந்தார்.
மேலும், இதனால் அரசுக்கு 10 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும், அந்த ஆதாரங்கள் அனைத்தையும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் அளிக்கப்போவதாகவும் கூறி அதிர வைத்தார்.
இதற்கு பதிலளித்துள்ள வைகுண்டராஜன், தன் அண்ணன் குமரேசனுக்கு மூளைக்கோளாறு இருப்பதாகவும், அதனால்தான் தன் மீது அவதூறுகளை கூறி வருவதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், குமரேசன் மீண்டும் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
எங்கள் வீட்டில் மொத்தம் 5 ஆண் குழந்தைகள். கடைசி ஆண் குழந்தைக்கு 10 மாதம் இருக்கும் போது என் தாய் இறந்துவிட்டார். அவனை வளர்ப்பதற்காக உவரியில் இருந்து ஒரு சாதாரண ஏழை குடும்பத்து பெண்ணை எனது தந்தை அழைத்து வந்தார்.
ஆனால் அந்த பெண் என் தந்தையை மயக்கி அவர் வலையில் விழ வைத்தார். அவருக்கு பிறந்தவர்தான் வைகுண்டராஜன். அதனால் வேறு வழியில்லாமல் ஏற்றுக்கொண்டாம். ஆனால் என் தந்தை அவரை முறைப்படி திருமணம் செய்து கொள்ளவில்லை.
அப்படி இருக்கும் போது வைகுண்டராஜன் எப்படி என் சகோதரனாகிவிட முடியும்? அதை என்னால் ஒத்துக்கொள்ள முடியாது. ஏராளமான சொத்துகளை என் தந்தையிடம் எழுதி வாங்கிக் கொண்டார்கள்” என்று அவர் கூறினார்.