டெல்லியில் நடைபெறும் திமுக ஆர்ப்பாட்டம்.. ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் பங்கேற்பு..!

Siva

புதன், 5 பிப்ரவரி 2025 (18:38 IST)
டெல்லியில் திமுக இளைஞர் அணி நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் முன்னாள் உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட சில பிரபலங்கள் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பல்கலைக்கழக மானிய குழுவின் வரைவு நெறிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மாணவர் அணி டெல்லியில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது. இந்த வரைவு நெறிமுறைகளை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் நாளை காலை 10 மணிக்கு நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் கலந்து கொள்ள உள்ளனர்.

கல்வியை ஒட்டுமொத்தமாக மத்திய அரசு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்லும் நடவடிக்கைகளை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக திமுக மாணவர் அணி செயலாளர் எழிலரசன் எம்பி தெரிவித்தார். முதலில் தேசிய கல்விக் கொள்கை, இப்போது கூட்டாட்சிக்கு எதிரான வரைவுகள் ஆகியவற்றை கண்டித்து முதல்வர் மு க ஸ்டாலின் ஏற்கனவே தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளார் என்றும், முதல்வரின் உத்தரவால் தான் டெல்லியில் இந்த போராட்டம் நடத்தப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

இந்த போராட்டத்தில் திமுக எம்பி டிஆர் பாலு உட்பட சில திமுக எம்பிக்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும், விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை எம்பிக்களும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்