மக்களவைத் தேர்தலின் வாக்குப்பதிவின் போது நடந்த தாக்குதலுக்கு யார் காரணம் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி விளக்கம் அளித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் தேர்தல் நாளன்று பானை சின்னத்தில் வாக்களிப்பது தொடர்பாக அங்குள்ள இரு பிரிவு மக்களுக்கு இடையே பிரச்சனை எழுந்தது. அங்குள்ள தலித் மக்கள் தங்கள் வீட்டு சுவர்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவனின் சின்னமான பானை சின்னத்தை வரைந்திருந்ததால் அப்பகுதிக்குள் புகுந்த வன்னிய மக்கள் சிலர் வீடுகளை அடித்து நொறுக்கினர். மேலும் அங்கிருந்த சில தலித் மக்களையும் தாக்கினர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் உருவானது.
இதையடுத்துப் பிரச்சனைக்குக் காரணம் பாமகவும் இந்து முன்னணியும்தான் என விடுதலை சிறுத்தைகள் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தெரிவிக்க பாமகவோ பாதிக்கப்பட்ட மக்கள் மீதே காவல்துறை வழக்குப் பதிவு செய்திருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இருக்கும் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
அவர் ‘ பொன்பரப்பி மற்றும் பொன்னமராவதி வன்முறை சம்பவங்களுக்கு சமூகவலைதளங்கள்தான் முக்கியக் காரணம். அவற்றில் உள்ள இளைஞர்கள் பொறுப்பற்று நடந்துகொள்கிறார்கள். மக்கள் அமைதியை விரும்பினாலும் சில சுயநல சக்திகள் வன்முறையைத் தூண்டி விடுகிறார்கள். காவல்துறை உண்மையானக் குற்றவாளிகளைக் கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்த தேவையில்லை’ எனக் கூறியுள்ளார்.