கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரண விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேலும் ஒரு பொதுநல தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து சுமார் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. விஷச்சாராய விற்பனையில் தொடர்புடைய 21 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட காவல் துறை அலுவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மாவட்ட ஆட்சித் தலைவர் பணியிட மாறுதல் செய்யப்பட்டார். இந்த வழக்கு CBCID வசம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் கோகுல்தாஸ் தலைமையில் ஒரு நபர் ஆணையமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வால்பாறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஸ்ரீதரன் சென்னை உயர்நீதி மன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்துள்ளார்.
அதிமுக, பாமக மற்றும் பாஜக வழக்கறிஞர்கள் தாக்கல் செய்த பொதுநல வழக்கு மனுக்களோடு சேர்த்து விசாரிக்க வேண்டுமென உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஜி எஸ் மணி ஆஜராகி, உயர்நீதிமன்று பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் முறையிட்டார்.
அவரது முறையீடை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, ஏற்கனவே தொடரப்பட்ட வழக்குகளோடு இந்த மனுவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்தனர். இந்த பொதுநல மனுவையும் வரும் 11ஆம் தேதி மற்ற மனுக்களோடு சேர்த்து விசாரிப்பதாக தலைமை நீதிபதி குறிப்பிட்டார்.