ஜெயலலிதா உடல்நிலை; எது உண்மை: இன்று தெரியும்!

Webdunia
வியாழன், 6 அக்டோபர் 2016 (09:53 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 14 நாட்கள் ஆகியும் அவர் இன்னமும் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பவில்லை.


 
 
இதனையடுத்து முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவியது. மருத்துவமனை தரப்பில் இருந்து வரும் விளக்கங்கள் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இல்லை. அரசு தரப்பிலும் முதல்வரின் உடல் நிலைகுறித்து எந்த விளக்கமும் இல்லை.
 
இதனால் பொதுமக்கள் மத்தியில் முதல்வருக்கு என்ன ஆச்சு என்ற குழப்பம் இன்று வரை நீடித்து வருகிறது. வதந்திகளை நம்புவதா, மருத்துவமனை சொல்வதை நம்புவதா என குழம்பி இருந்து சூழலில் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி முதல்வரின் உடல்நிலை குறித்து அறிய உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
 
அந்த மனுவில், தமிழக முதல்வரின் உடல்நிலை குறித்த உண்மையான அறிக்கையை வெளியிடவேண்டும். முதல்வரின் உடல்நிலை சரியாகும் வரை தற்காலிக முதல்வரை தமிழக ஆளுநர் நியமனம் செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
 
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மருத்துவமனை அறிக்கை வெளியிட்டாலும், தமிழக அரசு ஏன் இது பற்றி ஒன்றும் கூறாமல் உள்ளது? அரசின் முக்கிய முடிவுகளை யார் எடுக்கிறார்கள்? என்பதை மக்களுக்கு ஏன் தெரியப்படுத்தவில்லை? தலைமை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் இது பற்றி பொதுமக்களுக்கு ஏன் விளக்கம் அளிக்கவில்லை? முதல்வரின் உடல் நிலை பற்றிய தகவலைப் பெற்று அட்வகேட் ஜெனரல் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.
 
இதனையடுத்து இது குறித்தான அரசின் விளக்கம் இன்று நீதிமன்றத்தில் அளிக்கப்படும் என கூறப்பட்டது. முதல்வர் உடல்நிலை பற்றி நீதிமன்றத்தில் அளிக்கப்படும் தகவல் என்பதால் இது முக்கியத்துவமிக்கதாக பார்க்கப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்