ஈஷா சார்பில் 6 இடங்களில் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள்!

Webdunia
திங்கள், 11 செப்டம்பர் 2023 (11:04 IST)
ஈஷா சார்பில் தமிழகத்தில் 6 இடங்களில் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் திருச்சியில் அமைச்சர் கே.என். நேரு தொடங்கி வைத்தார்.

ஈஷா கிராமோத்சவம் திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாட்டில் 6 இடங்களில் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் இன்று (செப்.10) கோலாகலமாக நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கிராம அணிகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

ஈஷா அவுட்ரீச் சார்பில் தென்னிந்திய அளவில் நடத்தப்படும் 15-வது ஈஷா கிராமோத்சவம் திருவிழா ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. கிளெஸ்டர் அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகள் பங்கேற்கும் மண்டல அளவிலான போட்டிகள் கோவை, திருச்சி, திருநெல்வேலி, மதுரை, வேலூர், ஈரோடு ஆகிய 6 மாவட்டங்களில் இன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது.

திருச்சியில் நடைபெற்ற போட்டியை தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு.கே.என். நேரு அவர்கள் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் திருச்சி மேயர் திரு.அன்பழகனும் உடன் பங்கேற்றார். ஈரோட்டில் நடைபெற்ற போட்டியை வீட்டு வசதித் துறை அமைச்சர் திரு. முத்துசாமி அவர்களும், வாலாஜாப்பேட்டையில் நடைபெற்ற போட்டிகளை கைத்தறி துறை அமைச்சர் திரு. காந்தி அவர்களும் தொடங்கி வைத்தனர்.
இதேபோல், கோவையில் நடைபெற்ற போட்டிகளை கோவை மேயர் கல்பனா அவர்கள் தொடங்கி வைத்தார்.

இதில் ஆண்களுக்கு வாலிபால், பெண்களுக்கு த்ரோபால், இருபாலருக்கு கபாடி போட்டிகள் என 4 போட்டிகள் பிரதானமாக நடத்தப்பட்டது. மேலும், போட்டிகளை காண வந்த பொதுமக்கள் மற்றும் சிறுவர்களுக்கு பொழுதுப் போக்கு விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டன. விறு விறுப்பாக நடந்த இப்போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகள் கோவையில் செப்.23-ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டிகளில் விளையாட தகுதி பெற்றுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்