முல்லைப் பெரியாறு அணையில் திமுக செய்த துரோகம்.- அண்ணாமலை
சனி, 9 செப்டம்பர் 2023 (12:25 IST)
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ''என் மண் என் மக்கள்'' என்ற பாதயாத்திரையை தமிழகம் முழுவதும் மேற்கொண்டு வரும் நிலையில், இன்று போட நாயக்கனூர் சென்றுள்ளார்.
இதுகுறித்து அவர் தன் சமூக வலைதள பக்கத்தில்,
#என்மண் என் மக்கள் 19ஆம் நூற்றாண்டில் தென்காசியம்பதி என்று அழைக்கப்பட்ட ஊரான போடிநாயக்கனூர் நகரில், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திரமோடி அவர்கள் மீது பேரன்பு கொண்ட மக்கள் திரள் நடுவே ஆரவாரமாக நடந்தது. நகரத்தில் ஊடுருவி பண்ணைகளை அழித்த காட்டுப்பன்றியை வீழ்த்திய போடயநாயக்கர் என்பவர் வீரத்தைப் போற்றி, திருவிதாங்கூர் மன்னரால் போடிநாயக்கனூர் என பெயரிடப்பட்டது.
நறுமணப் பொருள்களின் ராணி என்று அழைக்கப்படும் ஏலக்காய், ஆண்டுக்கு 40,000 டன் இங்கு விளைவிக்கப்பட்டு, நாடு முழுவதும் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதனால் தான் போடிநாயக்கனூர் ஏலக்காய் நகரம் என்று அழைக்கப்படுகிறது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, போடிநாயக்கனூரை குட்டி காஷ்மீர் என்று அழைத்தார். 1989ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில்,புரட்சி தலைவி ஜெயலலிதா அம்மா அவர்களை வெற்றி பெறச் செய்து எதிர்க்கட்சி தலைவராக ஆக்கிய ஊர் போடி என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், போடி பகுதியில், முல்லைப் பெரியாறு அணையில் திமுக செய்த துரோகம்.
தமிழக மக்களின் பல நாள் கோரிக்கையான முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடி உயர்த்தலாம் என 2006 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 அன்று, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு ஆணை இட்டது. அணையை வலுப்படுத்தும் பணிகளை முடித்த பிறகு, முழுக் கொள்ளளவான 152 அடிக்கு உயர்த்திக் கொள்ளவும் அனுமதி அளித்தது. 2006 ஆம் ஆண்டு மார்ச் 18 அன்று, கேரள கம்யூனிஸ்ட் அரசு ஒரு மசோதாவை நிறைவேற்றி, கேரளாவில் உள்ள இருபத்தி இரண்டு அணைகளின் முழு நீர்த்தேக்க மட்டத்திற்கு உச்சவரம்பை நிர்ணயித்தது. முல்லைப் பெரியாறு அணை அணையின் கொள்ளளவு உச்சவரம்பு, கேரள கம்யூனிஸ்ட் அரசின் மசோதாவால் 136 அடியாக நிர்ணயிக்கப்பட்டது. 142 அடியை 136 அடியாக கேரளா அரசு குறைத்தது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தவேண்டும் என்று உச்சநீதி மன்றத்தின் வழிகாட்டுக்குழு கூறியும், கேரளா அரசு ஒப்புக்கொள்ளவில்லை. 142 அடியாக உயர்த்தினால் அணை உடைந்துவிடும் என்று கேரளா காங்கிரஸ் கட்சி பிரச்சாரம் செய்தது. தமிழகத்தில் ஆட்சியில் இருந்த திமுக இவை அனைத்தையும் வேடிக்கை பார்த்தது. அன்று மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்த, ஜல்லிக்கட்டை காட்டுமிராண்டி விளையாட்டு என்று தடை செய்த காங்கிரஸின் ஜெயராம் ரமேஷ், செப்டம்பர் 2009 இல் பெரியாறு புலிகள் சரணாலயத்திற்குள் புதிய அணை கட்டுவதற்கு ஏற்ற இடத்தைக் கண்டறியவும், ஆய்வு செய்யவும் கேரள அரசுக்கு அனுமதி வழங்கினார். அதுவரை தூக்கத்தில் இருந்த கருணாநிதி திடீரென விழித்து கொண்டு கேரளா அரசுக்கு எதிராகப் போராட்டம் அறிவித்தார். போராட்டம் நடத்தினால் 2G வழக்கு சம்மந்தமாக சிபிஐ ரெய்டு வரும் என்று ஜெயராம் ரமேஷ் கருணாநிதியை எச்சரித்தார். உடனடியாக போராட்டத்தை வாபஸ் பெற்றவர் கருணாநிதி. தமிழக மக்களுக்கு எதிரான கருணாநிதி மற்றும் திமுகவின் துரோக வரலாறுகளில் இதுவும் ஒன்று. திமுக ஆட்சியில் இருந்து தூக்கி எறியப்பட்ட பிறகுதான், 2012ஆம் ஆண்டு, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்ந்தது. இப்போது ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த 30 மாதங்களாக பேபி அணையை சரி செய்கிறோம் என்று ஊரை ஏமாற்றி கொண்டிருக்கிறார் ஸ்டாலின். தந்தை எவ்வழியோ மகனும் அவ்வழியே
தேனியில் திராட்சைப் பழங்களை அடிப்படையாகக் கொண்ட தொழிற்சாலை, முருங்கைக்காய் பூங்கா, குமுளியில் இருந்து கண்ணகி கோயிலுக்குத் தார்ச் சாலை, கூ.சுப்புலாபுரம், ஆண்டிப்பட்டியில் உயர் தொழிட்நுட்ப ஜவுளிப் பூங்கா, தேனி, பெரியகுளம், போடிநாயக்கனூரில் மாம்பழக் கூழ் தொழிற்சாலை, ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்பவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என தேனி மாவட்ட மக்களுக்கு திமுக வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றாமல் ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.
வரும் பாராளுமன்றத் தேர்தலில், இந்த துரோக திமுக கூட்டணியை மக்கள் மொத்தமாகப் புறக்கணித்து, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திரமோடி அவர்களை மூன்றாவது முறையாகப் பிரதமராகத் தேர்ந்தெடுப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமுமில்லை என்று தெரிவித்துள்ளார்.