முரசொலி அலுவலகம் ’பஞ்சமி ’ நிலமா ? டாக்டர் ராமதாஸ் டுவீட் ! திமுக அப்செட் ...

Webdunia
வியாழன், 17 அக்டோபர் 2019 (14:08 IST)
தனுஷ் நடித்த ’அசுரன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது.  இந்த படத்திற்கு விமர்சகர்கள் மற்றும் சமூக வலைதள பயனாளர்கள் கொடுத்த பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக திரையரங்குகளில் குடும்பம் குடும்பமாக பார்வையாளர்கள் சென்று வருகின்றனர். 
எல்லோரும் இப்படத்தை பார்த்துவரும் நிலையில்,  நேற்று இரவு, தூத்துக்குடியில் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் ’அசுரன்’ திரைப்படத்தை பார்த்தார். இந்த படத்தை பார்த்த பின்னர் அவர் கூறியதாவது:

அசுரன் - படம் மட்டுமல்ல பாடம்! பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் - சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்! கதை-களம்-வசனம் என வென்று காட்டியிருக்கும் வெற்றிமாறனுக்கும் வாழ்ந்து காட்டியிருக்கும் தனுஷூக்கும் எனது பாராட்டுகள்’ என்று தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில் ஸ்டாலினின் இந்த டுவிட்டுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு டுவிட் பதிவிட்டுள்ளார்.
 
அதில், பஞ்சமி நில மீட்பு குறித்து பேசும் அசுரன் படம் அல்ல... பாடம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் - ஆஹா.... அற்புதம்... அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று, முரசொலி அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என்று நம்புவோம்! என தெரிவித்துள்ளார்.
 
ராமதாஸ் இப்படி பதிவிட்டுள்ளதைப் பார்த்தால் திமுக கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டதா ? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
 
அதிமுக கூட்டணியில் உள்ள ராமதாஸ், எதிர்க்கட்சியினரை தாக்கும் விதத்தில் இந்த டுவீட்டை பதிவிட்டிருந்தாலும், இல்லாவிட்டாலும் கூட எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் இதற்குப் பதிலளிப்பார் என பலரும் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். ரமாதாஸின் இந்த டுவிட்டுக்கு திமுக தொண்டர்கள் டென்சனாகி உள்ளதாகவும் இதற்கு தக்க பாடம் சொல்ல வேண்டுமென கூறி வருவதாகவும் தகவல்கள் வெளியாகிறது.

(பஞ்சமி  நிலம் என்பது பட்டியலின மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக கடந்த 1892 ஆம் ஆண்டு பிரிட்டிஷாரால் வழங்கப்பட்ட வேளாண் நிலங்கள் ஆகும்.)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்