காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய விமான நிலையம் உருவாக்கும் முயற்சி நடைபெற்று வரும் நிலையில் இந்த விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் அந்த பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பரந்தூர் மக்களை சந்தித்ததால் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஆளும் கட்சிக்கு நெருக்கமான ஜி ஸ்கொயர் என்ற நிறுவனம் பரந்தூரை சுற்றி ஏக்கர் கணக்கில் நிலம் வாங்கி போட்டு உள்ளதால் தான் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்பதில் ஆளுங்கட்சி உறுதியாக உள்ளது என்ற குற்றச்சாட்டு உள்ளது.
இந்த நிலையில் இது குறித்து ஜி ஸ்கொயர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அந்த விளக்கத்தில், பரந்தூர் பகுதியில் எங்களுக்கு எந்த இடமும் இல்லை, எங்கள் நிறுவனம் இந்தியாவில் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனம், பரந்தூர் கிராமத்தில் தனி நபர் மற்றும் அரசியல் காரணங்களுக்காக எங்கள் நிறுவனம் நிலத்தை வாங்கி வைத்துள்ளதாக சில தவறான தகவலை பரப்பி வருகிறார்கள்.
இந்த நிலையில் பரந்தூரில் எங்கள் நிறுவனத்திற்கு எந்த இடமும் இல்லை எங்கள் நிறுவனத்திற்கு எந்த அரசியல் தொடர்பும் இல்லை என்பதை உறுதியாக கூறிக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளது.