நீட் தேர்வை எதிர்த்து போராடிய மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டதையடுத்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்து வருகிறது. ஜல்லிக்கட்டு போராட்டத்தை போல இந்த போராட்டமும் உருமாறும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த மாணவர்கள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் தியானதில் ஈடுபட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக அங்கிருந்து வெளியேற்றினர்.
இதனை மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி கடுமையாக சாடியுள்ளார். இதுகுறித்து பிரபல தமிழ் இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள பாலபாரதி, மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் அதிமுகவுக்குச் சொந்தமானது அல்ல.
ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் தியானம் செய்யலாம், எடப்பாடி பழனிசாமி அரசு செல்லலாம், ஆனால், மாணவர்கள் தியானம் நடத்தக்கூடாது. அரசியல்வாதிகள் அங்கு பதவிக்கான போராட்டம் நடத்தலாம். மாணவர்களின் உரிமைக்கான போராட்டம் நடத்தக்கூடாதா? என்றார் கடுமையாக.
மக்களின் சுதந்திரத்தையும் கருத்துரிமையையும் பறிக்கும் செயல் இது. ஜல்லிக்கட்டு போராட்டத்துக்குப் பிறகு, அரசுக்கு பயம் வந்துவிட்டது. அதனால்தான், காவல்துறையை வைத்து அடக்குமுறைகளை ஏவிவிடுகின்றனர் என்றார் பாலபாரதி.