பொதுத் தோ்வு பணிகளுக்கு தனியாா் பள்ளி ஆசிரியா்களை அனுப்பாவிட்டால்? பள்ளிக்கல்வி துறை எச்சரிக்கை..!

Siva

ஞாயிறு, 30 மார்ச் 2025 (07:23 IST)
பொதுத் தேர்வு பணிகளில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொள்ளாவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை எச்சரித்துள்ளது.
 
தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2, மற்றும் 10-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் மார்ச் 3 முதல் 27 வரை நடத்தப்பட்டன. 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடத் தேர்வுகள் நடந்தன. மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்ட 4,113 தேர்வு மையங்களில் 9 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுதியுள்ளனர். இந்த தேர்வு ஏப்ரல் 15 வரை தொடரும்.
 
பொதுவாக, தேர்வு மையங்களில் கண்காணிப்பாளர்களாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களே நியமிக்கப்படுவார்கள். ஆனால், தேர்வு மையங்கள் அதிகமாக இருப்பதால், தனியார் பள்ளி ஆசிரியர்களும் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
 
இந்நிலையில், சில மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளிகள் ஆசிரியர்களை தேர்வு பணிக்கு அனுப்ப மறுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை கண்டித்து தேர்வுத் துறை, தனியார் பள்ளிகள் கட்டாயமாக ஆசிரியர்களை பணிக்கு அனுப்ப வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
தேர்வுத் துறை இயக்குநரகம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்கள் மூலம் சுற்றறிக்கை அனுப்பி, தேர்வு பணிக்கு நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் கட்டாயமாக பணியில் கலந்துகொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது. இதற்கு மாற்றமாக செயல்படும் தனியார் பள்ளிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்