நண்பனிடமே செல்போனைத் திருடிய இளைஞர்கள்… திருப்பிக் கேட்டவருக்கு நேர்ந்த கொடூரம்!

Webdunia
செவ்வாய், 16 ஜூன் 2020 (07:32 IST)
மதுரை அருகே ஸ்ரீதர் என்பவரின் செல்போனைத் திருடிக் கொண்ட நபர்கள் அதை திருப்பிக் கேட்ட நிலையில் அவரை கொலை செய்துள்ளனர்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அய்யவாதெருவைச் சேர்ந்த 19 வயது சிட்டு என்கிற ஸ்ரீதர் ஒரு கொலை வழக்கில் சிக்கி சிறைக்கு சென்று தற்போது ஜாமீனில் வெளியில் வந்திருப்பவர். இந்நிலையில் அவருக்கு சாரங்கன் மற்றும் கோபாலகிருஷ்ணன் ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மூவரும் ஒன்றாக அமர்ந்து அடிக்கடி மது குடித்து வந்துள்ளனர்.

கடந்த நான்கு நாட்களுக்கு முன் மூன்று பேரும் சேர்ந்து மது அருந்திய போது ஸ்ரீதரின்  மொபைல் போன் காணாமல் போயுள்ளது. மறுநாள் காலை தனது செல்போனை திருடிவிட்டதாகவும், அதனைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றும், ஸ்ரீதர் மற்ற இருவரிடமும் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் கொடுக்க மறுத்துள்ளனர். இதனால் மூவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அன்று இரவு கோபாலகிருஷ்ணன் மற்றும் சாரங்கன் ஆகிய இருவரும்  சுடுகாட்டுக்கு அருகில் அமர்ந்து மது குடித்துக் கொண்டு இருந்துள்ளனர். அப்போது அங்கே சென்ற ஸ்ரீதர் அவர்களிடம் செல்போனைக் கேட்டுள்ளனர். அப்போது வாக்குவாதம் முற்றவே தாங்கள் குடித்திருந்த பீர் பாட்டிலால் ஸ்ரீதர் தலையில் அடித்தும், உடைந்த பாட்டில்களை சொருகியும் அவரைக் கொலை செய்துள்ளனர்.

அதன் பின் அருகில் இருந்த கட்டிடத்தில் அவரைத் தூக்கி வீசிவிட்டு, சென்றுள்ளனர். போலிஸார், ஸ்ரீதரின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும் கொலையாளிகள் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்