மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக கூட்டணி இன்னும் முடிவாகாத நிலையில் அதிமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, தேர்தல் ஏற்பாடுகள் என மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. பாஜகவுடன் புதிய தமிழகம் கட்சி, சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி ஆகியவை கூட்டணியை அறிவித்துள்ளன. திமுகவில் வழக்கமான தோழமை கட்சிகளோடு உடன்பாடு ஏற்பட்டு அதே கூட்டணி தொடர்கிறது.
ஆனால் அதிமுகவில் இன்று வரை கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை மட்டும் நடந்து வருகிறதே தவிர அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் அதிமுகவிலிருந்து விலகி சிலர் பாஜகவில் இணைவதும் நடந்து வருகிறது. கடந்த 2011ல் ஜெயலலிதா இருந்தபோது நடந்த சட்டமன்ற தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியில் அதிமுக சார்பில் நின்று வென்று எம்.எல்.ஏவாக பதவி வகித்தவர் ராஜலெட்சுமி.
இன்று அவர் அதிமுகவிலிருந்து விலகி பாஜகவில் தமிழக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் இணைந்தார். தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த திடீர் கட்சி மாற்றங்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.