தினகரனுக்கு எதிர்ப்பு காட்டாத மதுசூதனன் : அதிர்ச்சியில் எடப்பாடி

Webdunia
புதன், 19 செப்டம்பர் 2018 (16:40 IST)
சமீபத்தில் ஆர்.கே.நகர் தொகுதிக்கு வந்த அப்பகுதி எம்.எல்.ஏவுக்கு அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தரப்பு எதிர்ப்பு காட்டாத விவகாரம் அதிமுக தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது.


 
ஆர்.கே.நகரில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிமுக அவைத்தலைவரும், அதிமுக வேட்பாளருமான மதுசூதனனை பல ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து டிடிவி தினகரன் வெற்றி பெற்றார். இதையடுத்து, அவர் 20 ரூபாய் டோக்கன் கொடுத்து வெற்றி பெற்றதாக மதுசூதனன் புகார் கூறினார். அதேபோல், ஆர்.கே.நகர் தொகுதிக்கு தினகரன் செல்லும் போதெல்லாம் தன்னுடைய ஆதரவாளர்களை திரட்டி 20 ரூபாய் நோட்டுகளை காட்டி  தினகரனுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
 
இதனால், டிடிவி ஆதரவாளர்களுக்கும், மதுசூதனன் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் எழுந்து, காவல் நிலையம் வரை சென்றது. 
 
இந்நிலையில், சமீபத்தில் ஆர்.கே.நகர் தொகுதிக்கு தினகரன் சென்றார். எனவே, வழக்கம்போல் மோதல் ஏற்படும் என அதிக போலீசார் குவிக்கப்பட்டனர். தினகரனும் தகுந்த பாதுகாப்புடன் அங்கு சென்றார். ஆனால், ஆச்சர்யப்படும் வகையில் அங்கு அவருக்கு எந்த எதிர்ப்பு இல்லை. சத்தமில்லாமல் வேலையை முடித்து விட்டு தினகரன் சென்றுவிட்டார். 

 
இது எடப்பாடி தரப்புக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம். இதற்கு காரணமும் இருக்கிறது. மதுசூதனனுக்கும், எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கும் இடையே மோதல் எழுந்துள்ளது. கூட்டுறவு தேர்தல் உள்ளிட்ட பல விவகாரங்களில் அமைச்சர் ஜெயக்குமாருக்கும், மதுசூதனனுக்கும் நேரிடையாக மோதல் எழுந்தது. எனவே, இது தொடர்பாக முதல்வர் பழனிச்சாமியிடம் மதுசூதனன் புகார் அளித்தார். 
 
ஆனால், ஜெயக்குமார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மதுசூதனன் கடும் அதிருப்தியில் இருக்கிறார். எனவேதான், எடப்பாடிக்கு பிடிக்காத தினகரன் ஆர்.கே.நகர் வந்த போது, மதுசூதனன் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருந்துவிட்டார் என தெரிய வந்துள்ளது.
 
மதுசூதனன் எங்கே தினகரன் பக்கம் சாய்ந்துவிடுவாரோ என்கிற பயம் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்