சசிகலாவை குறிவைக்கும் ஆணைய அறிக்கை : எடப்பாடி பக்கா பிளான் ; அதிர்ச்சியில் தினகரன்

செவ்வாய், 11 செப்டம்பர் 2018 (10:57 IST)
மறைந்த முதல்வர் ஜெ.வின் மரணம் தொடர்பான ஆணையத்தின் அறிக்கை சசிகலாவிற்கு எதிராகவே அமையும் படி காய்கள் நகர்த்தப்பட்டு வருவதால் டிடிவி தினகரன் தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது.

 
ஜெ.வின் மரணத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகம் எழுந்ததை அடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. போயஸ்கார்டனில் பணிபுரிந்தவர்கள், ஜெ.வுடன் பணி புரிந்த அதிகாரிகள், ஜெ.வின் குடும்ப மருத்துவர் மற்றும் அப்போலோ மருத்துவர்கள் என பலரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. சமீபத்தில் ஜெ.வின் தனிச்செயலாளராக இருந்த ராமலிங்கம் ஐ.ஏ.எஸ் மற்றும் அப்போலோ மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி சுப்பையா விஸ்வநாதன் ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.
 
அப்போது, பல முக்கிய தகவல்களை அவர்கள் ஆணையத்தில் பகிர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக, ஜெ.வின் உடல் நிலை தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கைகள் சசிகலாவின் அறிவுரைப்படியே வெளியிடப்பட்டது என ஒத்துக்கொள்வது போலவே கேள்விகள் எழுப்பப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி - ஓபிஎஸ் ஆகியோரின் வழிகாட்டுதல் படி எல்லாவற்றுக்கும் சசிகலாவே காரணம் எனவே அறிக்கையின் முடிவு வெளியாகும் எனத் தெரிகிறது. 

 
தேர்தல் நேரத்தில் அந்த அறிக்கையை வெளியிட்டு ‘அம்மாவை கொன்ற சசிகலா தரப்புக்கா ஓட்டு போடுவீர்கள்?’ என மக்களிடம் வாக்கு சேகரிக்கும் திட்டத்தில் எடப்பாடி -ஓபிஎஸ் தரப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தொடக்கம் முதல் தற்போது வரை ஆணையத்தின் விசாரணையும் சசிகலாவையே நோக்கியே நகர்வதை தினகரனும் உணர்ந்துள்ளார்.
 
எனவே, தேர்தல் நேரத்தில் இறுதி அறிக்கையை வெளியிட்டால் அது கண்டிப்பாக நமக்கு பாதகமாக முடியும் என தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வரும் தினகரன், அதை எப்படி சமாளிப்பது என யோசித்து வருகிறாராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்