சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த ரஜினிகாந்த், தமிழக அரசியலில் வெற்றிடம் நிலவுவதாக கூறிய நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பதிலடி தந்துள்ளார்.
சமீபத்தில் கமல் தயாரிப்பு நிறுவனத்தில் மறைந்த இயக்குனர் கே.பாலச்சந்தரின் மார்பளவு சிலையை கமல்ஹாசனுடன் திறந்து வைத்த ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ”திருவள்ளுவரை போல் எனக்கும் காவி சாயம் பூச பார்க்கிறார்கள், ஆனால் நாங்கள் இருவரும் சிக்கி கொள்ளமாட்டோம்” என கூறினார்.
அதை தொடர்ந்து போயஸ் கார்டனில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரஜினிகாந்த், காவி சாயம் குறித்தான தனது கருத்திற்கு விளக்கம் அளித்தார். பின்பு தொடர்ந்து பேசிய அவர், “தமிழக அரசியலில் வெற்றிடம் நிலவுகிறது’ என கூறினார்.
இந்நிலையில் ரஜினியின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ”தமிழகத்தில் வெற்றிடம் இல்லை என்பது இடைத்தேர்தல் மூலம் நிரூபணம் ஆகி உள்ளது, ஆளுமைமிக்க தலைவர்கள் இல்லை என யார் சொன்னது?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், ரஜினிகாந்த் என்ன அரசியல் தலைவரா? அவர் ஒரு நடிகர்” எனவும் கூறியுள்ளார். ரஜினிகாந்த் தான் கட்சி ஆரம்பிப்பதாக அறிவித்ததிலிருந்து, தமிழக அரசியலில் வெற்றிடம் உருவாகியுள்ளது என தொடர்ந்து பேசி வரும் நிலையில் தற்போது முதல்வர் பதிலடி தருவது போல் பதிலளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.