இணைப்புக்கு வாய்ப்பே இல்லை.. உறுதியாக இருக்கும் ஈபிஎஸ்.. வருத்தத்தில் 6 முன்னாள் அமைச்சர்கள்..!

Siva
புதன், 24 ஜூலை 2024 (07:25 IST)
அதிமுக மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என முன்னாள் அமைச்சர்கள் ஆறு பேர் எடப்பாடி பழனிச்சாமி இடம் சமீபத்தில் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி இணைப்புக்கு வாய்ப்பே இல்லை என்று பதில் கூறிவிட்டதாக கூறப்படுவது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

அதிமுகவிலிருந்து பிரிந்த டிடிவி தினகரன், சசிகலா மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகியவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்றும் வலிமையான திமுக கூட்டணியை எதிர்க்க அதிமுக ஒன்றிணைந்தால் மட்டுமே முடியும் என்றும் ஆறு சீனியர் அமைச்சர்கள் சமீபத்தில் எடப்பாடி பழனிச்சாமி இடம் பேசினார்கள்.

இது குறித்து காரசாரமான விவாதம் நடந்ததாகவும் விவாதத்தின் முடிவில் அதிமுக அலுவலகத்தை அடித்து உடைத்தவர்கள், அதிமுகவுக்கு துரோகம் செய்தவர்களையும் மீண்டும் இணைக்க முடியாது என்றும் எடப்பாடி பழனிசாமி உறுதியாக கூறிவிட்டதால் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் 6 பேர் வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருந்ததை அடுத்த தான் சமீபத்தில் பேட்டி அளித்த ஆர்பி உதயகுமார் ’கறந்த பால் மடி புகாது, கருவாடு மீன் ஆகாது’ என்று பத்திரிகையாளர்களிடம் பேசியதாகவும் முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த சில தலைவர்களிடம் இணைப்புக்கு வாய்ப்பே இல்லை, கட்சியை வலுப்படுத்த வேறு வழியை தேட வேண்டும் என்று கூறியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்