அமைச்சர்களோடு வியூகம் வகுக்கும் எடப்பாடியார்! – ஓபிஎஸ்ஸுக்கா? தேர்தலுக்கா?

Webdunia
செவ்வாய், 6 அக்டோபர் 2020 (09:31 IST)
அதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்து நாளை அதிமுக தலைமை அறிவிக்க உள்ள நிலையில் இன்று அமைச்சர்கள் முதல்வரை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் குறித்து ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து இருவரையும் அதிமுக அமைச்சர்கள் சந்தித்து பேசி வருகின்றனர். இந்நிலையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரையும் அக்டோபர் 6ம் தேதி சென்னை வர அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.

முதல்வர் வேட்பாளர் குறித்து அதிமுக தலைமை 7ம் தேதி அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சொந்த ஊரான பெரிய குளத்தில் உள்ள ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் மூன்று நாட்களாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தேனியில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்ட விழா ஒன்றிற்கு அவரது ஆதரவாளர்கள் பேனர் வைத்துள்ளனர். அதில் தமிழகத்தின் அடுத்த முதல்வரே என குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று தமிழக அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, செந்தில்பாலாஜி, ஜெயக்குமார் உள்ளிட்டவர்களோடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். இன்று வைத்திலிங்கம், ஆர் பி உதயகுமார் ஆகியோர் முதல்வரை அவரது இல்லத்தில் சந்தித்து பேசி வருகின்றனர். முதல்வர் எடப்பாடியாருக்கு ஆதரவாக அமைச்சர்கள் பேச இருப்பதாக கூறப்படுகிறது. ஓபிஎஸ்ஸுக்கு கட்சியில் உயர்பதவியை வழங்கி அவரை சமரசம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம் என பேசிக் கொள்ளப்படுகிறது.

அதேசமயம் நேற்று அமைச்சர்களோடு நடந்த கூட்டம் ஓபிஎஸ் கேட்டப்படி ஆலோசனை குழு அமைப்பது பற்றியதல்ல. மாறாக தேர்தல் பணிகளுக்கு அமைக்கப்பட வேண்டிய குழுக்கள் பற்றி பேசப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் தற்போது எடப்பாடியார் ஏற்படுத்தி வருவது தேர்தல் வியூகமா? ஓபிஎஸ்ஸுக்கு எதிரான வியூகமா? என அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்