வீடுகளுக்கு வழங்கப்படும் 100 யூனிட் மின்சாரம் ரத்து என சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வரும் நிலையில், அது உண்மை இல்லை என மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
இரண்டு மாதத்திற்கு ஒருமுறை வீடுகளில் மின்சார கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வரும் நிலையில், அதில் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. 100 யூனிட் போக மீதமுள்ள யூனிட்டுகளுக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்த நிலையில், 100 யூனிட் இலவச மின்சாரத்தை ரத்து செய்ய மின்வாரியம் திட்டமிட்டு வருவதாக சமூக வலைதளங்களில் நேற்று மாலை முதல் ஒரு வதந்தி மிக வேகமாக பரவி வரும் நிலையில், இது உண்மை இல்லை என மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
இது குறித்து மின்வாரியம் தனது சமூக வலைதளத்தில் கூறிய போது, சமூக வலைதளங்களில் பரப்பப்படும் இந்த உண்மைக்கு மாறான செய்திகளை நம்ப வேண்டாம் என்றும், எங்களின் அதிகாரப்பூர்வ தளங்களை மட்டும் பார்க்கவும் என்றும் தெரிவித்துள்ளது.
இலவச மின்சாரம் ரத்து என்பது முழுக்க முழுக்க தவறான தகவல் என்றும், மின்வாரியத்தின் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளிவரும் செய்திகள் மட்டுமே உண்மை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை அடுத்து, வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து என்பது முழுக்க முழுக்க வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது."