துபாய் - ஸ்பெயின் பயணம் தோல்வி.! அமெரிக்கா செல்வதால் என்ன பயன்.? ஸ்டாலினுக்கு அன்புமணி கேள்வி..!!

Senthil Velan
வெள்ளி, 23 ஆகஸ்ட் 2024 (13:54 IST)
2030ஆம் ஆண்டிற்குள் தமிழகத்தை ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருளாதாரமாக உயர்த்தப் போவதாக முதல்வரும், அவரது அமைச்சரவை சகாக்களும் கூறி வருவது நல்ல நகைச்சுவை தான் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார். 
 
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு ஈர்க்கப்பட்ட முதலீடுகளைக் கொண்டு கட்டமைக்கப்பட்ட ரூ.17,616 கோடி மதிப்பிலான 19 தொழில் திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்துள்ளார். தமிழகத்தில் சுமார் ரூ.10 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், அதில் வெறும் 1.80% முதலீடுகள் மட்டுமே செயல்வடிவம் பெற்றிருப்பதும், துபாய், ஸ்பெயின் நாடுகளில் கையெழுத்திடப்பட்ட முதலீட்டு ஒப்பந்தங்களில் எந்த முன்னேற்றமும் இல்லாததும் கவலை அளிக்கின்றன.
 
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான குழுவினர் வரும் 27ஆம் தேதி முதல் 17 நாட்களுக்கு அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கான தேவைகள், புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போது தொழில் முதலீடு ஈர்க்கப்பட வேண்டியதும், அதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியதும் தவிர்க்க முடியாதவை ஆகும். 
 
அதே நேரத்தில் கடந்த காலங்களில் முதலீடுகளை ஈர்க்க செய்யப்பட்ட முயற்சிகளின் நிலை என்ன? என்பதை தெளிவுபடுத்த வேண்டியது தமிழக அரசின் கடமை ஆகும். கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4 நாள் பயணமாக துபாய் சென்ற முதல்வர் ஸ்டாலின், அங்குள்ள நிறுவனங்களிடம் நடத்திய பேச்சுகளின் அடிப்படையில், லூலூ நிறுவனம் மூலம் ரூ.3500 கோடி, நோபுள் ஸ்டீல்ஸ் ரூ.1000 கோடி, ஒயிட் ஹவுஸ் ரூ.500 கோடி உட்பட மொத்தம் ரூ.6100 கோடி முதலீடுகளை ஈர்ப்பதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. 
 
ஆனால், அதன்பின் இரண்டரை ஆண்டுகள் ஆகும் நிலையில், அந்த நிறுவனங்களிடமிருந்து எந்த முதலீடும் வந்ததாகத் தெரியவில்லை. அதைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதம் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது.  அதன்பின் ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், முதலீடு திரட்டுவதற்காக என்று கூறி, கடந்த ஜனவரி மாத இறுதியில் 8 நாள் பயணமாக ஸ்பெயின் நாட்டிற்கு முதல்வர் ஸ்டாலினும், குழுவினரும் சென்றனர். பின்னர், அவரது பயணம் 14 நாட்களாக நீட்டிக்கப்பட்டது.

14 நாட்கள் பயணத்தின் நிறைவில் பெருமளவில் முதலீடு திரட்டப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஹபக் லாய்டு நிறுவனம் ரூ.2500 கோடி, எடிபன் நிறுவனம் ரூ. 540 கோடி, ரோக்கா நிறுவனம் ரூ. 400 கோடி என மொத்தம் ரூ. 3,440 கோடி தொழில் முதலீடுகள் உறுதி செய்யப்பட்டதாக முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார். ஆனால், 7 மாதங்களாகி விட்ட நிலையில் ஒரு பைசா கூட அங்கிருந்து வரவில்லை. துபாய், ஸ்பெயின் நாடுகளில் செய்யப்பட்ட ஒப்பந்தங்களின்படி இதுவரை எந்த முதலீடும் வரவில்லை எனும் போது, அந்த பயணங்கள் தோல்வி என்று தான் கருத வேண்டியுள்ளது.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட இரு வெளிநாட்டு பயணங்களால் எந்த பயனும் இல்லை எனும் போது, மூன்றாவதாக அமெரிக்க நாட்டில் மேற்கொள்ளும் பயணத்தின் மூலம் மட்டும் என்ன பயன் விளைந்து விடப் போகிறது? என்ற வினா மக்கள் மனதில் எழுகிறது. அதற்கு விடையளிக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உண்டு. சென்னையில் கடந்த ஜனவரி மாதம் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்நாட்டில் 6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் முதலீடு செய்ய பல்வேறு நிறுவனங்கள் ஒப்புக் கொண்டன.

அதையும் சேர்த்து திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ரூ.9.74 லட்சம் கோடி முதலீட்டுக்கு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. அதன் மூலம் 18.70 லட்சம் பேருக்கு நேரடியாகவும், 14 லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலை கிடைக்கும் என தமிழக அரசு கூறியிருந்தது. ஆனால், உறுதியளிக்கப்பட்ட தொகையில் 1.80% அளவுக்கு மட்டுமே முதலீடு செய்யப்பட்டு, நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அதிலும் கூட பல நிறுவனங்கள் தி.மு.க., ஆட்சிக்கு முன்பாகவே முதலீட்டை உறுதி செய்திருந்தவை. 

அதேபோல், சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அடிக்கல் நாட்டப்பட்ட 28 தொழில் திட்டங்களின் மொத்த மதிப்பு ரூ.51,157 கோடி மட்டும் தான். இது உறுதியளிக்கப்பட்ட முதலீட்டில் 5.25% மட்டும் தான். உறுதியளிக்கப்பட்ட முதலீடுகள் அனைத்தும் சில வாரங்களிலோ, சில மாதங்களிலோ செய்யப் பட்டு விடும் என்று கூற முடியாது. ஆனால், அதிகபட்சமாக ஓராண்டு அல்லது இரு ஆண்டுகளிலாவது முதலீடுகள் வருவதற்கான அறிகுறிகள் தென்பட வேண்டும். அதுகூட நடக்காதது வருத்தமளிக்கிறது.
 
தமிழக அரசு வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி இதுவரை உறுதியளிக்கப்பட்ட முதலீடுகளின் மொத்த மதிப்பு ரூ.9.74 லட்சம் கோடியாகும். இதில் கடந்த ஜனவரி மாதம் நடத்தப்பட்ட முதலீட்டாளர் மாநாடு மூலம் ஈர்க்கப்பட்ட முதலீடு ரூ.6.64 லட்சம் கோடி எனும் போது சுமார் ரூ.3.10 லட்சம் கோடி முதலீடுகள் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டவை. அவை குறைந்தது ஓராண்டு முதல் மூன்றாண்டுக்கு முன்னதாக உறுதி செய்யப்பட்டவை என்பதால், முழுமையாக செயல்பாட்டுக்கு வந்திருக்க வேண்டும்.

ஆனால், சென்னையில் நேற்று அடிக்கல் நாட்டப்பட்ட மற்றும் தொடங்கப்பட்ட தொழில் திட்டங்களின் மொத்த மதிப்பு ரூ.68,773 கோடி. இது உறுதி செய்யப்பட்ட முதலீட்டில் வெறும் 7% மட்டும் தான். அதுமட்டுமின்றி, இதில் ரூ.59,454 கோடி கடந்த ஜனவரி மாதம் நடத்தப்பட்ட முதலீட்டாளர் மாநாட்டில் உறுதி செய்யப்பட்டது என தமிழக அரசே தெரிவித்துள்ளது. அப்படியானால், அதற்கு முன் உறுதி செய்யப்பட்ட ரூ.3.10 லட்சம் கோடி முதலீட்டில் ரூ.9,319 கோடி, அதாவது வெறும் 3% மட்டும் தான் இதுவரை செயல்வடிவம் பெற்றுள்ளது என்பது உறுதியாகியுள்ளது.
 
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் வானத்தை வில்லாக வளைத்து விட்டதாக தி.மு.க., அரசு கூறிக் கொண்டாலும், களநிலை என்பது கவலையளிப்பதாகவே உள்ளது. இந்த வேகத்தில் முதலீடுகளை ஈர்த்துக் கொண்டு, 2030ஆம் ஆண்டிற்குள் தமிழகத்தை ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருளாதாரமாக உயர்த்தப் போவதாக முதல்வரும், அவரது அமைச்சரவை சகாக்களும் கூறி வருவது நல்ல நகைச்சுவை தான். தமிழகம் பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் என்பது தான் 7.65 கோடி தமிழக மக்களின் கனவு ஆகும். அதை நோக்கிய பயணத்தில் கடந்த 3 ஆண்டுகளில் ஈர்க்கப்பட்டதாக கூறப்படும் ரூ.9.74 லட்சம் கோடி தொழில் முதலீடுகள் இப்போது எந்த நிலையில் உள்ளன? 

ALSO READ: டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும்.! புதிய தலைவர் எஸ்.கே.பிரபாகர் உறுதி.!!
 
தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்த தொழில் திட்டங்கள் எத்தனை? அவற்றின் முதலீடு எவ்வளவு? அடிக்கல் நாட்டப்பட்ட தொழில் திட்டங்கள் எத்தனை? அவற்றின் மதிப்பு எவ்வளவு? மீதமுள்ள தொழில் முதலீடுகள் என்னவாயின? அவை வருவதற்கு வாய்ப்புகள் உண்டா? என்பன உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும்  என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்