நீதிபதிகளின் நியமனம் கவலை அளிக்கின்றது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
சென்னை உயர்நீதிமன்றம் உட்பட நாட்டின் அனைத்து உயர்நீதிமன்றங்களிலும் கடந்த 5 ஆண்டுகளில் நியமிக்கப்பட்ட நீதிபதிகளில் 15% மட்டுமே பிற்படுத்தப்பட்ட (எஸ்.சி, எஸ்டி, ஓபிசி& சிறுபான்மையினர்) வகுப்புகளைச் சேர்ந்தவர்கள் என்று மத்திய அரசின் சட்டத்துறை கூறியிருப்பது கவலையளிக்கிறது!
உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களின் நீதிபதிகளை பரிந்துரைக்கும் அதிகாரம் நீதித்துறைக்கு வழங்கப்பட்டு முப்பதாண்டுகளுக்கு மேலாகியும் நீதிபதிகள் நியமனம் சமூகப் பன்முகத்தன்மையும், உள்ளடக்கிய தன்மையும் கொண்டதாக மாறவில்லை என்பதை மத்திய அரசே ஒப்புக்கொண்டிருக்கிறது!
பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் நீதிபதி பதவிக்கு தகுதியானவர்கள் ஏராளமானோர் உள்ளனர். அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியும் கூட எந்த மாற்றமும் நிகழவில்லை. அறிவுரைகள் ஏற்கப்படவில்லை என்றால் சட்டம் இயற்றுவது தான் ஒரே தீர்வு!
எனவே, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீட்டை கொண்டு வர வேண்டும். பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த தகுதியும், திறமையும் கொண்டவர்கள் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்!