கவலை தெரிவித்து பயன் இல்லை, எச்சரிக்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ்

வியாழன், 22 டிசம்பர் 2022 (12:44 IST)
இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்வதற்கு மத்திய அமைச்சர் கவலை தெரிவித்து பயனில்லை என்றும் இலங்கையை எச்சரிக்கை வேண்டும் என்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:
 
வங்கக்கடலில் கோடியக்கரை அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் 12 பேரை சிங்களக் கடற்படை கைது செய்துள்ளது. அவர்களின் படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  சிங்களக் கடற்படையினரின் அத்துமீறல் கண்டிக்கத்தக்கது!
 
தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படுவது கடந்த 25 நாட்களாக இல்லாமல் இருந்தது. அதுமட்டுமின்றி இதுவரை கைதான அனைத்து மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதனால், மீனவர் சமுதாயம் நிம்மதி அடைந்த நிலையில் தான் அடுத்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது!
 
இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நாடாளுமன்றத்தில் கவலை தெரிவித்திருக்கிறார். இதனால் பயன் ஏற்படாது. இலங்கையை கண்டிப்பதும், எச்சரிப்பதும் தான் இத்தகைய அத்துமீறல்களை தடுத்து நிறுத்தும்!
 
இலங்கைப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 12 மீனவர்களையும், நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளையும் மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர் சிக்கலுக்குத் தீர்வு காண இருதரப்பு மீனவர்களின் பேச்சுக்கு மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும்!
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்