ஜனவரி 8ஆம் தேதி போராட்டம் குறித்து முக ஸ்டாலின் முக்கிய அறிக்கை!

Webdunia
திங்கள், 6 ஜனவரி 2020 (08:32 IST)
குடியுரிமை சீர்திருத்த சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி ஜனவரி 8ஆம் தேதி அகில இந்திய அளவிலான வேலை நிறுத்தத்திற்கு இடதுசாரி கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. நாடு முழுவதும் இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தாலும் கேரளா, மேற்குவங்கம் உள்பட ஒருசில மாநிலங்களில்அரசு ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் இந்த போராட்டத்திற்கு திமுக ஆதரவு என திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் தனது அறிக்கையில் கூறியதாவது: தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு பதிலாக, அவற்றை பறிப்பதில் ஆளும் பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஊதியம், தொழிலாளர் பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி முறையிட்டும் கடந்த ஆறு வருடங்களாக பாஜக அரசு தொழிலாளர்களை வஞ்சித்து வருவது கண்டனத்திற்குரியது
 
எனவே தொழிலாளர்கள் நலனுக்காக பாடுபட்டு வரும் சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் வரும் 8-ஆம் தேதி தேசிய அளவில் நடத்த இருக்கும் வேலை நிறுத்த போராட்டத்துக்கு திமுக ஆதரவு அளிக்கின்றது. மேலும் போராட்டம் அறிவித்துள்ள தொழிற்சங்க பிரதிநிதிகளை பிரதமர் மோடி உடனடியாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்’ என்று கூறியுள்ளார்.
 
இந்த நிலையில் ஜனவரி 8ஆம் தேதி அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் விடுப்பு எடுக்காமல் பணிக்கு வர வேண்டும் என தலைமை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்