தான் கொள்ளையடித்த அந்த 20 ஆயிரம் கோடி ரூபாயை அமைச்சர் ஜெயக்குமாரிடம் தான் கொடுத்து வைத்துள்ளதாக தினகரன் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னை புளியந்தோப்பில் அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் தினகரன் மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை வைத்தார்.
தினகரன் ஜெயிலுக்கு சென்றது எதற்காக? திருடனுக்கும், தியாகிகளுக்கும் வித்தியாசம் இருக்கிறது. 1991-க்கு முன்னர் அந்த குடும்பத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு இருந்தது? தற்போது எவ்வளவு உள்ளது. கிட்டத்தட்ட 20 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து இருக்கிறது அவர்களிடம்.
ஜெயலலிதாவுக்கு தெரியாமல் தமிழ்நாட்டையே கொள்ளையடித்து கோடி கோடியாக குவித்து அந்த பணத்தில் அதிமுகவை கைப்பற்ற நினைக்கிறார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தினகரனை கடுமையாக விமர்சித்தார்.
இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமாரின் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து தினகரனிடம் கேள்வி எழுப்பினர் செய்தியாளர்கள். இதற்கு பதில் அளித்த தினகரன், கொள்ளையடித்த 20 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை ஜெயக்குமாரிடம் தான் கொடுத்து வைத்துள்ளேன். அந்த பணத்தை கொடுக்காமல் ஏமாற்றுவதற்கு தான் ஜெயக்குமார் இப்படி பபூன் மாதிரி தினமும் பேசிக்கொண்டு இருக்கிறார் என்றார்.