பொது கழிப்பறையை சுத்தம் செய்தாரா தர்மபுரி எம்.பி? – உண்மை பிண்ணனி என்ன?

Webdunia
செவ்வாய், 17 செப்டம்பர் 2019 (20:36 IST)
பாமக தொண்டர் ஒருவர் விடுத்த சவாலை ஏற்று தருமபுரி தி.மு.க எம்.பி பொது கழிவறையை சுத்தம் செய்ததாக சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது.

தருமபுரி நாடாளுமன்ற தொகுதியின் தி.மு.க வேட்பாளராய் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் டாக்டர் எஸ்.செந்தில்குமார். சமீபத்தில் இவர் ட்விட்டரில் ” மக்களுக்கான சேவகன் நான்” என பதிவிட்டிருந்த போது பாமக தொண்டர் ஒருவர் அப்படியென்றால் பொது கழிப்பறையை சுத்தம் செய்து கொடுங்களேன் என கிண்டலாக கேட்டதாக சொல்லப்படுகிறது. இதை சவாலாக ஏற்ற எம்.பி செந்தில்குமார் தருமபுரி அரசு மருத்துவமனையில் உள்ள பொது கழிப்பறையை சுத்தம் செய்ததாக புகைப்படங்கள் வெளியாகின.

ஆனால் அரசியல் வட்டாரங்களில் இந்த சம்பவம் வேறு மாதிரியாக பேசப்படுகிறது. டாக்டர் செந்தில்குமார் வேட்பாளராக களம் இறங்கியபோதே தனது உறுதி மொழிகளில் முக்கியமாக தருமபுரியை சுத்தமான, ஆரோக்கியமான தொகுதியாக மாற்ற இருப்பதாக பலமுறை சொல்லி இருந்திருக்கிறார். வெற்றிபெற்ற பின் மக்களுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வந்து தெரிவிக்கலாம் என்று கூறியிருக்கிறார். அதன்படி பலர் தருமபுரி மாவட்ட பேருந்து நிலையம் மற்றும் அரசு பொது மருத்துவமனை கழிப்பிடங்கள் அசுத்தமாக இருப்பதாகவும், அதை சரிவர பராமரிப்பதில்லை என்றும் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.

இதனால் முதற்கட்டமாக அரசு பொது மருத்துவமனையின் கழிப்பறை, பேருந்து நிலைய கழிப்பறை போன்றவற்றை ஆய்வு செய்த செந்தில்குமார் தண்ணீர் வசதி சரியாக இருக்கிறதா? ஒழுங்காக பராமரிக்கப்படுகிறதா? என்று ஆய்வுகளை மேற்கொண்டு, அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு அலோசனை வழங்கியுள்ளார். அவர் எந்த சவாலையும் ஏற்று இதை செய்யவில்லை எனவும், அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானதுடன் அரசியல்ரீதியான தவறான தகவல்களும் அதில் சேர்க்கப்பட்டு விட்டன என்றும் சிலர் கூறுகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் எம்.பி செந்தில் குமார் இதற்கு முன்னரே மக்கள் பிரச்சினை பலவற்றை களத்திற்கு சென்றே ஆய்வு செய்து வருவதாகவும், அதுகுறித்த புகைப்படங்கள், கானொளிகள் உள்ளூர் தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதள பக்கங்களிலும் பதிவிடப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்