தமிழகத்தில் நேற்று முன் தினம் வீசிய கஜாப் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேவைப்படும் நிவாரணங்கள் பற்றிய ஒரு பார்வை.
தஞ்சை, நாகை, புதுக்கோட்டை , திண்டுக்கல் மற்றும் ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் கஜாப் புயல் அதிகமான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள மக்கள் தங்கள், வீடு , பயிர்கள் மற்றும் கால்நடைகளை இழந்து தவித்து வருகின்றனர். மின்சாரம் முழுவதுமாக அந்தப் பகுதிகளில் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் இருளில் தத்தளித்து வருகின்றனர்.
அரசு மற்றும் தேசியப் பேரிடர் மேலாண்மை குழு ஆகியோர் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் மற்றும் இளைஞர்களும் தன்னார்வலராகப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மற்ற மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் உணவுப் பொருட்கள் ,பிஸ்கட் மற்றும் குடிநீர் போன்ற பொருட்களை அதிகளவில் அளித்து வருகின்றனர். இவையெல்லாம் போதுமான அளவில் கிடைத்து வருவதாகவும், உடனடித் தேவையான முக்கியமான சிலப் பொருட்கள் கிடைக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேவைப்படும் சில முக்கியமானப் பொருட்கள்
மெழுகுவர்த்திகள்
கொசுவர்த்திகள்
சிறுவர்களுக்கான் உடைகள்
குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான் நாப்கின்
சுகாதாரமான குடிநீர்
சிறிய அளவிலான டார்ச் லைட்டுகள்
ஜென்ரேட்டர்கள்
மேலும் சாலைகளில் விழுந்துள்ள மரங்களை வெட்டி அப்புறப்படுத்துவதே சிரமானப் பணியாக உள்ளதால், மரம் வெட்டும் இயந்திரங்கள் மற்றும் அவற்றை அப்புறப்படுத்த லாரி, ஜேசிபி போன்ற வாகனங்களும் தேவைப்படுகின்றன. இவற்றைப் பொது மக்களால் அளிக்க இயலாது எனினும் இது சம்மந்தமான தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் கவனத்திற்கு இந்த தகவலைக் கொண்டு செல்ல வேண்டும். மரங்களை அப்புறப்படுத்தினால் மட்டுமே அப்பகுதிகளுக்கு மீண்டும் மின்சாரம் அளிக்க முடியும் என்ற கையறு நிலை உருவாகியுள்ளது.